Wednesday, July 13, 2011

ராணி-மங்கம்மாள்

பேரனோ கைக்குழந்தை, மகனோ இறந்து விட்டான். மருமகளும் உடன்கட்டை ஏறிவிட்டாள். கணவனும் இல்லை. சுற்றிலும் மராத்தியர்கள், மைசூர்காரர்கள், மொகலாயர்கள், தஞ்சாவூர்க்காரர்கள், தக்காண சுல்தான்கள் என்று ஏகப்பட்ட எதிரிகள்... போதாக்குறைக்கு, திருவாங்கூர் மன்னனும், மதுரை நாயக்கன் கிழவன் சேதுபதியும் மல்லுக்கு நிற்கிறார்கள்.

என்ன செய்வார் அந்தப் பெண். சாதாரணப் அபலைப் பெண் என்றால் கவலைக் கொண்டிருப்பார். ஆனால் இவர் ராணி மங்கம்மாள் அல்லவா? மூன்று வயது பேரனை அரசனாக முடிசூட்டி காபந்து அரசைக் கையில் எடுத்தார். அது 1689 ஆம் ஆண்டு.

1659 ஆம் ஆண்டு, மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம் தளபதியாக இருந்த லிங்கம நாயக்கருக்கு மகளாகப் பிறந்தார். தன் தளபதியின் மகளைப் பார்த்து விரும்பிய சொக்கநாத நாயக்கர், மங்கம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் 1682 ஆம் ஆண்டு சொக்கநாத நாயக்கர் செத்துப் போக, இளம் பிராயத்தவனான அவர் மகன் முத்து வீரப்ப நாயக்கன் மகுடம் சூட்டிக்கொண்டான். ஆனால் ஏழு ஆண்டுகள் மட்டுமே ஆண்ட முத்து வீரப்ப நாயக்கன், 1689 ஆம் ஆண்டு மரணமடைந்தான். அப்பொழுது கர்பிணியாக இருந்த முத்து வீரப்பனின் மனைவி குழந்தையைப் பெற்று எடுத்தபின், மங்கம்மாளின் எதிர்பையும் மீறி, முத்து வீரப்பனை எரித்த இடத்தில் சிதை மூட்டி அத்தீயில் புகுந்து உயிர் துறந்தாள்.

அப்பொழுதுதான் இந்த சூழ்நிலைகளைக் கண்டு மனம் தளராமல், கைக்குழந்தையான பேரனுக்கு முடிசூட்டி விட்டு தளவாய் நரசப்பையா உதவியுடன் காபந்து ஆட்சி நடத்த ஆரம்பித்தார் மங்கம்மாள்.

ஆண்கள் மட்டுமே பட்டத்திற்கு உரிமையுள்ளவர்கள் - ஆட்சி செய்ய தகுதியுள்ளவர்கள் என்று கூறப்பட்ட அந்த காலத்தில், மிகவும் இக்கட்டான ஒரு தருணத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மங்கம்மாள், உண்மையில் பெரும் ராஜதந்திரியாகவும், சிறந்த நிர்வாகியாகவும், எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவராகவும் இருந்தார். 
அந்த நேரத்தில் தான்  ஒரு பெரும் சோதனை வந்தது. அந்த சோதனையை மிகத் திறமையாக எதிர் கொண்டு, தான் ஒரு சிறந்த ராஜதந்திரி என்று நிரூபித்தார்.
 
இந்த நிலையில் தான் அவருக்கு ஒரு பெரும் சோதனை வந்தது. அப்பொழுது செஞ்சி புகழ் பெற்ற மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜியின் மகனான ராஜாராமின் கட்டுபாட்டில் இருந்தது. ராஜாராமிடம் இருந்து செஞ்சியியை மீட்கும் நோக்குடன் தன் தளபதி சுல்பிகார் அலி கானை தெற்கு நோக்கி அனுப்பினார் மொஹலாய மன்னர் ஔரங்கசீப்.

பெரும் படையுடன் தெற்கு நோக்கி வந்த ஜுல்பிகார் அலி, தஞ்சையையும், ராணி மங்கம்மாளின் தலைநகரான திருச்சியையும் சேர்த்து தாக்க முற்பட, தூது அனுப்பினார் மங்கம்மாள். அதன்படி டெல்லிக்கு கீழ்படிந்து நடப்பதாகவும், திரை செலுத்துவதாகவும் ஒப்புக்கொண்ட மங்கம்மாள், ஜுல்பிகாரின் துணையோடு, முன்னர் தன் ஆட்சியில் இருந்து தஞ்சாவூர் மன்னரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளைத் திரும்பப் பெற்றார்.

தன்னுடைய பகுதிகளை பிடிக்க வந்த தன்னிலும் வலிமை வாய்ந்த எதிரியை எதிர்க்காமல், விட்டுக் கொடுத்து, பின் அவரின் துணைக்கொண்டு தான் முன்னர் தஞ்சாவூர் மன்னரிடம் இழந்திருந்த பகுதிகளை மங்கம்மாள் மீட்ட இந்த சம்பவத்தை, மிகச் சிறந்த ராஜதந்திரமாக சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.

மொஹலாயர் படையெடுப்பை தன்னுடைய அறிவைக்கொண்டு சமாளித்த மங்கம்மாளுக்கு அடுத்த சோதனை தொடர்ந்தது. மொஹலாயர் படை டெல்லி திரும்பிய சிறிது காலத்தில், மைசூர் மன்னர் சிக்கதேவராயர் தன்னுடைய தளவாயான குமாரய்யாவின் தலைமையின் திருச்சியைக் கைப்பற்ற படை அனுப்பினார்.குமாரய்யா அவருடைய காலத்தில், படை நடத்துவதில் சிறந்த தளபதி என்று இந்திய முழுவதும் புகழ் பெற்று இருந்தார். இருந்தால் என்ன? ராணி மங்கம்மாள் சிறிதும் அஞ்சவில்லை. சென்ற முறை தன் விவேகத்தைக் காட்டிய மங்கம்மாள், இம்முறைத் தன் வீரத்தைக் காட்ட முடிவெடுத்தார்.

ராணி மங்கம்மாள் ஒன்றும் போர்க்கலைத் தெரியாதவர் அல்ல. எப்பொழுது விவேகம் வேண்டும்? எப்பொழுது வீரம் வேண்டும் என்று அவருக்கு தெரியாதா என்ன? மங்கம்மாளின் தலைநகரான மலைகோட்டை மாநகர், போர்க்கோலம் பூண்டது. குமாரய்யாவை எதிர்க்க தன்னுடைய படைகளைத் தயார் நிலையில் வைத்தார் மங்கம்மாள்.

அப்பொழுது மங்கம்மாள் சிறிதும் எதிர்பாராத ஒன்று நடந்தது.
 
திருச்சி போர்க்கோலம் பூண்டாலும், மைசூரில் இருந்து புறப்பட்ட குமாரய்யா திருச்சி வந்து சேரவில்லை. குமாரய்யா மைசூரில் இருந்து புறப்பட்டு, திருச்சி நோக்கி தன் படைகளோடு பயணித்த போது, இதை சாதமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த மராத்தியர்கள், மைசூரைத் தாக்க தொடங்கினர்.
இதனால், குமாரய்யா தன் படைகளோடு மீண்டும் மைசூர் திரும்பினார்.
இதன் பின்னர் திரை கொடுக்க மறுத்த திருவாங்கூர் மன்னன் ரவி வர்மா மீதும், தன்னுடைய ஆட்சியின் ஆரம்பம் முதல் தொல்லைக் கொடுத்து வந்த தஞ்சை மராத்திய மன்னன் ஷாஜி மீதும் படையெடுத்து வெற்றி பெற்றார் மங்கம்மாள்.
இவ்வாறு தன்னுடைய வீரத்தை திருவாங்கூர், தஞ்சாவூர் போர்களில் நிரூபித்த மங்கம்மாள், மிகச்சிறந்த நிர்வாகத்தையும் வழங்கினார். இவருடைய ஆட்சியில் பல அணைகளும், ஏரிகளும், குளங்களும் சீரமைக்கப்பட்டன. கன்யாகுமரியில் இருந்து திருச்சி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை இவருடைய ஆட்சியில் தான் முதன் முதலில் அமைக்கப்பட்டது. அது இன்றுவரைப் பயன்பாட்டில் உள்ளதோடு, மிக முக்கிய சாலையாகவும் உள்ளது இவருடைய நிர்வாகத் திறமைக்கு சான்று.
இவரால் கட்டப்பட்ட மதுரை சந்திப்புக்கு அருகில் உள்ள மங்கம்மாள் சத்திரம்,  நூற்றாண்டுகள் கடந்தும் இவர் பெயர் கூறிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு வீரத்தையும் விவேகத்தையும் தனதாகக் கொண்டு மிகச்சிறந்த நிர்வாகத்தை வழங்கிய ராணி மங்கம்மாளின் இறுதிக் காலம், சோகம் நிறைந்த ஒன்றாக அமைந்து விட்டது.
தன்னுடைய பேரனை அரசனாக முடிசூட்டி அவர் காபந்து அரசை நடத்த ஆரம்பித்து சுமார் 15 ஆண்டுகள் ஆகியிருந்தன. வளர்ந்து, சிறுவன் என்ற நிலைக்கும் வாலிபன் என்ற நிலைக்கும் நடுவில் இருந்த விஜயரங்க சொக்கநாதன், தானே முழுமையாக ஆட்சி செய்ய விரும்பி, பாட்டியின் காபந்து ஆட்சியை வெறுத்தான். எனினும் மங்கம்மாள் உடனே ஆட்சியை முழுமையாக ஒப்படைக்க மறுக்க, மங்கம்மாள் விஜயரங்க  சொக்கனாதனால் அரண்மனைக் காவலில் வைக்கப்பட்டார்.
அரண்மனைக் காவலில் இருந்த மங்கம்மாள் மனவேதனையாலும், சரி வர உணவு கொடுக்கப்படாத காரணத்தாலும், சிறுகச்சிறுக உடல்நலம் குறைந்து மரணமடைந்தார். இன்றும் கூட நினைவு கூறப்படும் அளவு மிகச்சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்த, வீரமும் விவேகமும் நிறைந்த மங்கம்மாள், தன்னுடைய கடைசி காலத்தில் பேரனாலேயே சிறை செய்யப்பட்டு, அரண்மனைக் காவலில் வைக்கப்பட்டு கவனிப்பாரின்றி இறந்தது, சரித்திரம் பதிவு செய்திருக்கும் சோக வரலாறு.
 

No comments:

Post a Comment