மரணம் என்பது தவிர்க்க முடியாது. இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த பின் கண்டிப்பாக என்றாவது ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். சரி அந்த இறப்பிற்குப் பின் என்ன நடக்கிறது, அதுவரை மனித உடலில் அவனது எண்ணங்களாக வாழ்ந்த அந்த உயிர் என்னவாகிறது என்பதைச் சற்று பார்ப்போம்.
மனிதன் இறந்த பிறகு அவனது ஆன்மா மேலுலகம் செல்கிறது. அங்கு அது செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், ஆன்மாவின் பக்குவநிலைக்கேற்பவும் சூட்சும உலகங்களில் வசிக்கிறது. மறுபிறவி எடுத்து தங்கள் கர்மவினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஆன்மாக்கள், அதற்கான காலம் வரும் வரை காத்திருக்கிறது. ஆன்மாவின் தகுதிக்கேற்ப பல்வேறு வளர்ச்சிகளையும் அது பெறுகிறது. இயல்பிலேயே நல்லவர்களாக வாழ்ந்து மறைந்தவர்கள், மீண்டும் மறுபிறவி எடுத்து தங்கள் கர்மக் கணக்கைக் கழிக்க வேண்டியவர்களாக இருந்தால் அவர்கள் மேலும் நல்லவர்களாக அங்கு ஆகிறார்கள்.
அதுபோன்று தாங்கள் செய்த தீவினைகளுக்கு உண்மையாகவே அஞ்சி மனம் வருந்தும் ஆன்மாக்கள் நல்ல பக்குவத்தை அடைகின்றன. இந்தப் பக்குவமானது அவர்களது மறுபிறவிகளின் போதும் தொடர்ந்து அவர்களை நல்வழிப்படுத்துகிறது. அதாவது மறுபிறவியில் இவ்வகை ஆன்மாக்கள் நற்சிந்தனையுடன், நேர்மையான வாழ்க்கை வாழ முனைகிறது. இவர்களின் வாழ்வில் சஞ்சித கர்மாவும், பிராரப்த கர்மாவும் செயலாற்றுகின்றன. இவர்கள் நல்ல மனப் பக்குவம் பெற்று தீவழிகளில் செல்லாததால் ஆகாம்ய கர்மாவினது பாதிப்புகள் அதிகம் நேர்வதில்லை. விளக்கமாகச் சொன்னால் இவர்கள் மனிதர்களின் முற்பிறவி-மறுபிறவிச் சுழற்சியில் அதன் அடுத்த கட்டத்திற்கு பரிணாம வளர்ச்சியுறுகிறார்கள் என்று சொல்லலாம்.
ஆக மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. சரி, அப்படியானால் யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் தோன்றுகிறதல்லவா? சாஸ்திரங்களிலும், கருட புராணம், கடோபநிஷத் போன்றவற்றிலும் கூறப்படும் மறுபிறவி, பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.
பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை.
சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவைன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை.
தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும்.
பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ (அதாவது செல்வந்தர் வீட்டு நாய்க்குட்டிகள் போல) வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.
இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன. இதில் முக்கியமான உண்மை என்னவென்றால் பிறவி எடுத்த அனைவரும், அதாவது நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது எனலாம். விஞ்ஞானப் படிப் பார்த்தால் பிரபஞ்ச சக்தி என்ற பரம அணுவிலிருந்து பிரிந்து வந்த அணு என்னும் துகள் மீண்டும் அந்தப் பரம அணுவோடு ஒன்றிணைவதே முக்தி அல்லது வீடு பேறு எனப்படுகிறது.
உயிர்களாகப் பிறந்த நாம் எல்லோரும் என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு பிறவியில் அந்த நிலையை எய்தத் தான் போகிறோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
thanks to
No comments:
Post a Comment