நெப்போலியன்
மத்தியதரைக்கடலில் உள்ள கார்சிகா என்ற சின்ன தீவில் கார்லோ போனபார்ட் – மரியா லெட்டிஸியா ரமாலினோவுக்கும் பிறந்த எட்டுப் பிள்ளைகளில் இரண்டாவது மகன் நெப்போலியன். பிறந்த தேதி 15 ஆகஸ்ட், 1769!கத்தோலிக்கரான நெப்போலியன் பிறப்பே ராணுவப் பின்னணியில் அமைந்துவிட்டதால் (கார்லோ போனபார்ட்தான் பிரெஞ்சு மன்னன் 16-ம் லூயியின் பிரதிநிதி- கார்சிகா தீவுக்கு). தாயின் ஒழுக்கமான வளர்ப்பில் வளர்ந்த நெப்போலியனுக்கு, அந்த வாழ்க்கை முறையே பின்னர் வெற்றிகரமான ராணுவ வீரனாகத் திகழ உதவியது.
மேற்படிப்புக்காக, 1779-ல் கார்சிகா தீவிலிருந்து பிரான்சுக்கு வந்த நெப்போலியன் பிரையன் – லெ-சாடெ ராணுவப் பள்ளியில் சேர்கிறார்.
ராணுவப் பள்ளியில் கணக்கில் புலியாகத் திகழ்ந்த நெப்போலியன், வரலாறு – புவியியலில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ, அவரது ஆச்ரியர் இப்படிச் சொல்கிறார்: ‘இந்த மாணவன் மிகச் சிறந்த மாலுமியாக வருவான்’.
ஆனால் நெப்போலியன் மாலுமியாகவில்லை. மிகச் சிறந்த தரைப்படை வீரனுக்கான பயிற்சிகளைப் பெற்று முடித்தார். தந்தை இறந்ததால், வருமானம் இல்லாமல், இரண்டு ஆண்டு கல்வியை ஒரே ஆண்டில் கற்று முடித்தார் நெப்போலியன் என்கிறது அவரே எழுதி வைத்த வரலாற்றுக் குறிப்பு.
1785-ல் நெப்போலியன் இரண்டாம் நிலை லெப்டினென்டாக பதவி ஏற்றார். பிரெஞ்சுப் புரட்சி வெடித்த 1789-ம் ஆண்டுவரை பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் அந்தப் பதவியில் பணியாற்றினார். பின்னர் இரண்டாண்டுகள் லீவெடுத்துக் கொண்டு சொந்தத் தீவுக்குப் போய் அங்கு புரட்சியாளர்களுக்கு ஆதரவாக பிரெஞ்சு நராணுவத்தையே எதிர்த்துப் போராடினார். பின்னர் பாரிஸ் திரும்பினார். ராணுவ அதிகாரிகளை எப்படியோ சமாளித்து 1792-ல் கேப்டனாகப் பதவி உயர்வு பெற்று மீண்டும் கார்ஸிகா வந்தார்.
அப்போதுதான் அவருக்கும் கார்ஸிகாவின் தலைவர் பாஸ்கல் பாலிக்கும் இடையே மோதல் வலுக்க, குடும்பத்துடன் கார்ஸிகாவை விட்டே வெளியேற வேண்டிய சூழல் நெப்போலியனுக்கு. இது நடந்தது ஜூன் 1793 (வரலாறு முக்கியம்!).
புரட்சிக்காரர்களாகிய ரோபஸ்பியர் சகோதரர்களின் நட்பு கிடைத்தது நெப்போலியனுக்கு. இன்னொரு பக்கம், தனது தீவைச் சேர்ந்த வீரர் ஒருவரின் துணையுடன் டுலன் நகர குடியரசுப் படைகளின் கமாண்டராக நியமிக்கப்பட்டார் நெப்போலியன். அந்த நகரம் பிரிட்டிஷ் படைகளின் பிடிக்குள் வந்தபோது, அவர்களை வெற்றிகரமாக விரட்டியடித்து பிரிகேடியர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றார்.
ஆனால் 1794-ல் நெப்போலியன் கைது செய்யப்பட்டார். காரணம் புரட்சிக்காரர்களுடன் அவருக்கிருந்த தொடர்புகள் என்று விளக்கமளிக்கப்பட்டாலும், அடுத்த 10 நாட்களில் ரிலீஸாகிவிட்டார்.
வென்டீ எனும் பகுதியில் நடந்த புரட்சிக்கு எதிரான படைக்கு அவரை கமாண்டராக நியமித்தார்கள். ஆனால் ஆர்டிலரி ஜெனரலாக இருந்த நெப்போலியனுக்கு அது பதவியிறக்கமே. எனவே உடல்நிலையைக் காரணம் காட்டி அந்தப் பணியை செய்ய மறுத்தார். எனவே துருக்கியின் கான்ஸ்டான்டிநோபிளுக்கு தூக்கியடிக்கப்பட்டார். அங்கு சுல்தானின் படையில் பணியாற்ற அனுப்பப்பட்டார்.
அவரும் அந்தக் கால கட்டத்தில் துருக்கிக்குப் போய், ஒரு சூப்பர் ரொமான்டிக் நாவலை எழுதி முடித்துள்ளார்! ஒரு போர்வீரனுக்கும் அவனது காதலிக்குமான உறவைச் சொல்லும் கதை அது. அதில் இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்கள் நெப்போலியனுக்கு அவரது காதலிக்குமிடையே நடந்தவற்றின் தொகுப்பாகவே இருந்ததாம்.
ஆனால் இந்தப் பணி முடிந்து பாரிஸ் திரும்பிய நெப்போலியனை, முன்பு வென்டீ பணி மறுத்த காரணத்தால் பதவி நீக்கம் செய்தது அரசு. நெருக்கடிக்குள்ளானார் நெப்போலியன்.
ஆனால் அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் நெப்போலியனின் தயவை நாடியது புரட்சி நிர்வாகம் (டைரக்டர்ஸ் குழு), பால் பேரஸ் என்பவர் மூலம். இந்த முறை பாரிஸ் தெருக்களில் புரட்சிப் படைகளுக்கும் அரசப் படைகளுக்குமான உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பெரும் பொறுப்பு நெப்போலியனுக்கு தரப்பட்டது. அவரும் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி அக்டோபர் 5-ம் தேதி, பாரிஸ் தெருக்களில் ரத்த ஆறு ஓட, உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். 1400 அரச படையினர் கொல்லப்பட, எஞ்சியோர் ஓடிவிட்டனர்.
சாதாரண போர் வீரராக இருந்த நெப்போலியன் படிப்படியாக பிரஞ்சு நிர்வாகத்தின் கவனத்துக்குரியவராக மாறினார். பிரஞ்சுப் படைகளின் தளபதியானார்.
செல்வம் குவிந்தது. இந்தப் பொறுப்பை தனக்கு வாங்கிக் கொடுத்த பால் பேரஸ் மனைவி ஜோஸப்பினையே பின்னர் திருமணம் செய்து கொண்டார் நெப்போலியன் (ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் நெப்போலியனுக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. ஜோஸப்பினைப் பார்த்ததும் அந்த நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டார் மனிதர். அந்த நேரம் பார்த்து ஜோஸப்பின் கணவரும் போரில் கொல்லப்பட்டுவிட, திருமணத்துக்கு எந்தத் தடையுமில்லாமல் போனது!)
1796-ம் ஆண்டு கல்யாணமான இரண்டாம் நாள், இத்தாலியப் படையெடுப்புக்கு தலைமை தாங்கிச் சென்றார் நெப்போலியன்.
லோடி எனும் இடத்தில் நடந்த போரில் ஆஸ்திரியப் படைகளை லம்பார்டி பகுதிக்கு அப்பால் விரட்டியடித்தார். பின்னர் ரோம் வரை முன்னேறி போப்பின் அதிகாரத்தையும் ஆட்டம் காண வைத்தார். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இத்தாலியையும் பிரான்ஸின் மேலாதிக்கத்தை ஏற்க வைத்தார் நெப்போலியன். அதுமட்டுமல்ல… 1100 ஆண்டுகள் சுதந்திர நாடாகத் திகழ்ந்த ஆஸ்திரியாவின் மீது படையெடுத்து அதன் தலைநகர் வியன்னாவை 1797-ல் வீழ்த்தி, பிரான்சின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தார். பிரான்சின் சார்பாக போர் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவர் கைக்கு வந்தது… அது மட்டுமா.. வென்ற நாடுகளின் செல்வங்களை அடியோடு எடுத்துக் கொள்ளும் (கொள்ளையிடும்?) அதிகாரமும் நெப்போலியன் வசம்.
நெப்போலியன் போரிடும் ஸ்டைலே அலாதியானது. அவர் பழமையான போர் முறைகளை அடியோடு உடைத்தார். போரில் பெரும்பாலும் நெப்போலியன் நடுவில் நின்று தாக்க, அவருக்கு துணையாக இரு புறத்திலும் படைகள் திரண்டு வந்து தாக்கும்… எதிரிப் படை நிலைகுலைந்து போகும். இந்த டெக்னிக்கை, எதிரணியின் போக்குக்கேற்ப திடீர் திடீரென்று மாற்றிக் கொள்ளவும் செய்தார் நெப்போலியன். இன்னொன்றகு, எதிரி எந்தப் பகுதியில் வீக்காக இருக்கிறானோ அந்த இடத்துக்கு சடாலென போய் தாக்குவது இவரது பாணி. எப்படி போய் தாக்கவேண்டும், எந்த நேரம் என்றெல்லாம் பார்க்கக் கூடாது… நினைத்த மாத்திரத்தில் வேகமாகப் பாய்ந்து சென்று எதிரியை நிலைகுலைய வைத்தாலே போதும்… மற்றதை அவர் பார்த்துக் கொள்வார். இந்த டெக்னிக் கடைசி வரை அவருக்குக் கைக் கொடுத்தது.
இத்தாலிப் போரில் 150000 வீரர்களைச் சிறப்பிடித்த நெப்போலியன், ஏராளமான பீரங்கிகள் மற்றும் படையணிகளை கட்டி இழுத்து வந்தார்.
நெப்போலியன் செல்வாக்கு ஓஹோவென்று உயர்ந்தது. சொந்தமாக மூன்று செய்தித்தாள்களை நடத்தினார் அவர். இன்னொரு பக்கம் பிரான்ஸ் தேர்தல்களில் அரச விசுவாசிகளின் கை ஓங்கியது. இத்தாலியையும் ஆஸ்திரியாவையும் நெப்போலியன் கொள்ளையடித்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்ட, நெப்போலியன் பாரிஸுக்குப் போகாமலேயே, தனது ஆதரவாளர்கள் மூலம் ஒரு புரட்சியை அரங்கேற்றி அரச விசுவாசிகளை தூக்கினார். மீண்டும் அதிகாரம் நெப்போலியனுக்கு வேண்டப்பட்ட இயக்குநர்கள் கைகளுக்கு வந்தது.
இப்போது முன்னிலும் பல மடங்கு பாப்புலர் ஹீரோவாக பாரிசுக்குத் திரும்பினார் நெப்போலியன்.
அரசு நிர்வாகத்தை ஆளும் இயக்குநர்களை விட நெப்போலியனுக்கு கூடுதல் மரியாதை.. செல்வாக்கு!
இதை பிரான்ஸின் ஆட்சியாளர்களான இயக்குநர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த நேரம் பார்த்து எகிப்துக்குப் படையெடுத்துச் செல்ல நெப்போலியன் விருப்பம் தெரிவித்தார். அப்படியே, சூயஸ் கால்வாய் வழியாக ஒரு 15000 வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி, திப்பு சுல்தான் உதவியோடு பிரிட்டிஷ்காரர்களை விரட்டிவிட்டு, இந்தியாவில் பிரான்ஸின் வியாபார சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டும் என்றும் விரும்பினார்.
ஆனால் அவ்வளவு பெரிய படையை இந்தியாவுக்கு ஆகும் செலவு கட்டுப்படியாகுமா என ஆலோசகர்கள் யோசிக்க, ‘அட முதலில் அந்தாளை பாரிசிலிருந்து பக்குவமாக அனுப்பி வெச்சுடுங்க… போய் மெல்ல வரட்டும்’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டனராம் ஆட்சியிலிருந்த இயக்குநர்கள்.
நெப்போலியனின் எகிப்து பயணம் துவங்கியது.
இரண்டுமாதங்கள் பக்காவாக திட்டமிடப்பட்ட போர் அது. எகிப்து – சூயஸ் கால்வாய் பகுதிதான் மத்திய கிழக்கு நாடுகளின் நுழைவாயிலாகத் திகழ்ந்தது அன்றைக்கு. குறிப்பாக பிரிட்டிஷ்காரர்களுக்கு. அந்த வழியை அடைத்துவிட்டால்… அல்லது கையகப்படுத்திவிட்டால், பிரிட்டனின் வர்த்தக சாம்ராஜ்யத்துக்கு ஒரு செக் வைத்த மாதிரியும் இருக்கும், இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் என்பது நெப்போலியன் திட்டம்.
1798-ல் மால்டாவை அடைந்த நெப்போலியன், ஜஸ்ட் மூன்றே வீரர்களை இழந்து எகிப்தின் முக்கியத் துறைமுகத்தைப் பிடித்தார் நெப்போலியன். அடுத்த வாரத்தில் அலெக்ஸாண்ட்ரியாவை வீழ்த்தினார். அடுத்து ஒரு வாரம் நடந்த ‘பிரமிடு போரில்’ 300 பிரெஞ்சு வீரர்களை இழந்த நெப்போலியன், 6000 மாம்லுக் வீரர்களை வீழ்த்திவிட்டார்.
இருந்தாலும் இதை பெரிய வெற்றியாகக் கொண்டாட முடியவில்லை அவரால். காரணம் பிரிட்டிஷ் கப்பல் படை தளபதி நெல்சன். நெப்போலியனின் கப்பல் படையையே பெருமளவு நாசம் செய்துவிட்டார் அவர். மத்தியதரைக் கடலில் பிரான்ஸின் கடல் ஆதிக்கத்தை நிலை நாட்டும் நெப்போலியன் முயற்சி தோற்றுப் போனது என்றே வரலாறு பதிவு செய்துள்ளது.
இந்தத் தோல்வியிலிருந்து தப்பிக்க, ஆட்டோமான் துருக்கியர் வசமிருந்த சிரியா, கலிலே பகுதிக்கு தனது 13000 படையினருடன் சென்றார். அங்கே அரீஷ், காஸா, ஜாஃபா, ஹெய்ஃபா போன்ற கடலோர நகரங்களைக் கைப்பற்ற கடும் போரில் இறங்கினார். ஏராளமானவர்களைக் கொன்று ரத்தக் குளியல் நடத்தியது நெப்போலியன் படை. குறிப்பாக ஜாஃபாவில் நிகழ்ந்தது கொடூரத்தின் உச்சம்.
இங்கே பிரெஞ்சுப் படையை எதிர்த்துப் போரிட்டவர்கள் கைதிகளாக இருந்து படையில் சேர்க்கப்பட்டவர்கள். மொத்தம் 1400 பேர். இவர்களை துப்பாக்கியின் முனையில் இருந்த கத்தியால் குத்தியே கொன்றுவிட்டதாம் நெப்போலியன் படை. சுட்டால் குண்டு வீணாகிவிடுமே என்பதால் இந்த குரூரமாம். இவர்களைத் தவிர இந்தப் பகுதியில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களையும் விட்டு வைக்காமல் மூன்று நாட்கள் தொடர்ந்து கொன்றழித்தார்களாம் பிரெஞ்சுப் படையினர்.
இந்த கொடூரக் கொலையே பின்னர் பிளேக் நோய் பரவ காரணமாக, அது எங்கே தம் படையைத் தொற்றிக் கொள்ளுமோ என்று பின்வாங்கி மீண்டும் எகிப்துக்கு வந்துவிட்டார் நெப்போலியன்.
அதேநேரம் பிரான்ஸில் அவரது செய்தித் தாள்களும் உரிய நேரத்தில் டெலிவரி செய்யப்படாமல், பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
பிரான்ஸுக்கு திரும்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் நெப்போலியன். அங்கே பிரான்ஸ் படைகள் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தன.
தனக்கு பதில் கெப்ளர் என்பவரை பிரெஞ்சுப் படைகளுக்குப் பொறுப்பாக நியமித்துவிட்டு பிரான்ஸ் திரும்பினார் நெப்போலியன், 1799, அக்டோபர் மாதம். அப்போது கிட்டத்தட்ட நாடு திவாலாகியிருந்தது. அரசின் இயக்குநர்கள் செல்லாக் காசுகளாக பார்க்கப்பட்டனர். மக்களிடம் அவர்களுக்கு இம்மியளவு கூட மதிப்பில்லை.
இந்த சூழலை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார் நெப்போலியன். அதே நேரம் இயக்குநர்களோ தங்களுக்கு பெரும் சவாலாகத் திகழும் நெப்போலியனை எப்படி தூக்கியெறிவது என மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இயக்குநர் குழுவில் இருந்த தனக்கு வேண்டப்பட்டவர் மூலம் இன்னொரு புரட்சியை அரங்கேற்றினார் நெப்போலியன்.
9 நவம்பர் 1799-ல் இயக்குநர் குழுவைக் கலைத்துவிட்டு புதிய கான்சல் அமைப்பைத் தோற்றுவித்த நெப்போலியன், தன்னை முதன்மை கான்சலாக அறிவித்தார். அதற்கேற்ப புதிய அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றையும் தோற்றுவித்தார்.
பிரான்ஸின் ஆட்சியாளராக நெப்போலியன் பதவியேற்ற நேரம், மீண்டும் படு வீக்காக இருந்தது பிரான்ஸ் நாடு. இத்தாலி அதன் கட்டுப்பாட்டிலிருந்து விலகி மீண்டும் வாலாட்ட, தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திலிருந்து நெப்போலியன் தனது பெரும்படையுடன் ஆல்ப்ஸைக் கடந்து இத்தாலிக்குள் பிரவேசித்தார். ஆரம்பத்தில் சில சறுக்கல்கள் நேர்ந்தாலும், 1801-ம் ஆண்டு லுனவில்லே உடன்பாடு மூலம் வெற்றிகரமாக இத்தாலியை தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் பிரான்ஸின் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்டார் நெப்போலியன். மன்னராட்சிக்கு எதிராக பெரும் புரட்சி செய்து, குடியரசாட்சியை கொண்டு வந்த அதே நெப்போலியன் போனபார்ட், மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்தினார் பிரான்ஸில்!
தொடர்ந்து பல போர்களில் வென்ற நெப்போலியன், ஒரு கட்டத்தில் போர்ச்சுகல், பிரிட்டன், ஸ்கான்டிநேவியா நீங்கலாக மொத்த ஐரோப்பாவையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருந்தார். ரஷ்ய மன்னர் ஜார் அலெக்சாண்டருடன் டில்ஸிட் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, ஐரோப்பாவை இரு பகுதியாகப் பிரித்தார். தான் வென்ற நாடுகள் முழுவதிலும் தனது அண்ணன், தம்பிகள், நண்பர்களை ஆட்சியாளர்களாக நியமித்துக் கொண்டார்.
மொத்த ஐரோப்பாவும் தன் கைவசம் வந்ததால், பிரிட்டனுக்கு எதிராக பொருளாதாரத் தடையையும் கொண்டு வந்தார்… ஆனால் அது சரியான பலனைத் தரவில்லை.
1801-ம் ஆண்டு பிரிட்டன் மீது படையெடுத்து அந்த நாட்டையே உருத்தெரியாமல் அழித்துவிட வேண்டும் எனும் அளவுக்கு கடும் கோபம் கொண்டிருந்தார் நெப்போலியன். தனது தளபதிகளிடம், ‘பிரிட்டன் என்றொரு நாடு உலக வரைபடத்திலேயே இல்லை’ என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்று கமெண்ட் அடித்தார் என்றால் அவரது பிரிட்டிஷ் வெறுப்பு புரிந்திருக்கும்.
அவரது மனம் இந்த அளவு வெறுத்தாலும், உண்மையில் பிரிட்டனை தோற்கடிப்பது அத்தனை சுலமாக இல்லை. பொருளாதார ரீதியாகவும் நொடித்துப் போயிருந்தது நாடு. இந்த காலகட்டத்தில்தான் தனது ஆதிக்கத்திலிருந்த வட அமெரிக்காவின் பெரும்பகுதியை ஏக்கர் வெறும் 3 சென்ட்டுக்கு விற்று சமாளித்தார் நெப்போலியன். அதாவது ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பை வெறும் ரூ 400 க்கும் குறைவாக (7.4 டாலர்) விற்றுள்ளார்!!
ஒரே ஆண்டில் நிர்வாகத்தைப் புரட்டிப் போட்ட நெப்போலியன்!
பிரிட்டன் பக்கமும் இதே நெருக்கடிதான் கிட்டத்தட்ட. எனவே அந்த நேரத்தில் ஒரு தற்காலிக ஒப்பந்தம் போட்டார் பிரிட்டனுடன். பிரான்ஸின் அமியன்ஸ் எனும் இடத்தில் கையெழுத்தானது அந்த அமைதி ஒப்பந்தம், 1801 மார்ச் 25-ல். ஆனால் அதுவும் அற்பாயுளில் முறிந்தது. 1802-ம் ஆண்டே மீண்டும் போர்மேகங்கள் கவியத் தொடங்கின.
1789 முதல் 1815-ம் ஆண்டு வரை நடந்த பிரெஞ்சு யுத்தம் என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த போர்க்காலத்தில் ஐரோப்பா அமைதியாக இருந்தது இந்த ஒரு ஆண்டு மட்டுமே.
ஆனால் இந்த ஒரே ஆண்டில் அவர் செய்த சீர்திருத்தங்கள் பிரமிப்பூட்டுபவை. இன்றுவரை நெப்போலியன் அறிமுகப்படுத்திய திட்டங்கள், அரசியல் சட்டங்களே பிரான்ஸில் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸுக்கென சிவில் கோடு, ராணுவச் சட்டம், சாலை – பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட சிறப்பான உள்கட்டமைப்பு வசதி,
நாட்டின் சிறந்த குடிமகன்கள், வீரர்கள், கலைஞர்களை கவுரவிக்கும் விருதுகளை 1802-ம் ஆண்டு நெப்போலியன் அறிமுகப்படுத்தினார். அதில் ஒன்றுதான் செவாலியே விருது!
குற்றவாளிகளைத் தண்டிப்பதில் இன்றும் பிரான்ஸில் நடைமுறையில் உள்ளது நெப்போலியன் சட்டம்தான் (Code of Napoleon).
பொருளாதார நிர்வாகத்தை அத்தனை சிறப்பானதாக, ஒரு திட்டமிட்ட அமைப்பாக மாற்றியவரும் நெப்போலியனே. பிரான்ஸ் மத்திய வங்கி, புதிய நாணய முறை, ஒருமுகப்படுத்தப்பட்ட நிர்வாக முறை என எல்லோரும் வியந்து பார்க்கும் புதிய முறைகளை, எந்த நாட்டு பாதிப்பும் இன்றி நெப்போலியன் உருவாக்கியது இன்றும் சரித்திர ஆய்வாளர்களால் வியந்து பார்க்கப்படுகிறது.
ஆனால் நெப்போலியனை மிகச் சிறந்த நிர்வாகியாகத் தொடர்ந்து இருக்க விடவில்லை பிரிட்டன். 1803-ம் ஆண்டு மீண்டும் பிரான்ஸ் மீதான போரை அறிவித்தது பிரிட்டன்.
இதற்கிடையில் நெப்போலியன் தனக்கு பேரரசனாக முடிசூட்டிக் கொள்ள முடிவெடுத்து, அந்த வைபவத்தை நிறைவேற்ற போப் ஆண்டவரை வரவழைத்தார் (முந்தைய பகுதியில் இதை விரிவாகச் சொல்லவில்லை).
1804-ம் ஆண்டு, டிசம்பர் 2-ம் தேதி போப் ஆண்டவர் தனது கையில் பேரரசனுக்கான கிரீடத்தை வைத்துக் கொண்டு நிற்கிறார். ஆனால் அவர் கிரீடத்தை கடைசி நேரத்தில் சூட்டாமல் சதி பண்ணி விடுவாரோ என்ற சந்தேகம் நெப்போலியனுக்கு. பார்த்தார்… சட்டென்று அதை போப் கையிலிருந்து பிடுங்கி தானே சூட்டிக் கொண்டார்!
மனைவி ஜோஸப்பினை பேரரசியாக அறிவித்தார்.
பீத்தோவனின் கோபம்…
பின்னர் 1805-ம் ஆண்டு தனது ஆதிக்கத்திலிருந்த இத்தாலிக்கு ஒரு விஸிட் அடித்து, அங்கும் பேரரசனாக மிலன் தேவாலயத்தில் முடிசூட்டிக் கொண்டார். அப்போது 18 மார்ஷல்களை அறிவித்தார் நெப்போலியன். ஒருவர் செய்த பெரும் சாதனைகளுக்காக மன்னர்களால் அளிக்கப்படும் பெரும் கவுரவம் இந்தப் பதவி.
இதில்தான் நெப்போலியன் மீது பெரும் மனவருத்தம் கொண்டார் இசை மேதை பீத்தோவன். காதுகேளாத நிலையிலும் 9 சிம்பனிகளை அமைத்து சாதனை புரிந்தாரே, அதே பீத்தோவன்தான்.
நெப்போலியன் மக்களாட்சியின் காவலனாக இருப்பார் என்று எதிர்பார்த்து அவரை தீவிரமாக ஆதரித்து வந்தவர் பீத்தோவன். ஆனால் மன்னராட்சியின் நீட்சியாக வந்து பதவிப் பிச்சை போடுபவராக நெப்போலியன் மாறியது பிடிக்காமல் போனது. அப்போது பீத்தோவன் தனது 3 வது சிம்பனியை அமைத்துக் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது.
மீண்டும் போர்க்களத்தில் நெப்போலியன்!
உள்நாட்டுச் சீர்திருத்தங்கள், தனது ஆளுகைக்குட்பட்ட நாடுகளிலும் தன்னை பேரரசனாக நிலைநிறுத்துதல் என நெப்போலியன் பிஸியாக இருந்த நேரத்தில், பிரிட்டன் குழிபறிப்பு வேலையில் தீவிரமாக இறங்கியது.
நெப்போலியனின் கட்டாயக் கூட்டாளிகளான ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவின் மனதைக் கரைத்த பிரிட்டன், நெப்போலியனுக்கு எதிராக போர் அறிவிப்பு செய்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேற்கில் ஆங்கிலக் கால்வாய் வழியாக தனது ஸ்பெயின் – பிரெஞ்சு கூட்டு கடற்படையைக் கொண்டு பிரிட்டனுக்குள் ஊடுருவலாம் என நெப்போலியன் திட்டமிட்டார். ஆனால் அதனை முறியடித்துவிட்டது பிரிட்டன்.
அதேநேரம் கிழக்கு முனையில், ரஷ்யாவின் துணையுடன் பிரான்ஸை ஊடுருவ ஆஸ்திரியா முயன்றதை அறிந்த நெப்போலியன், தன் படையை உல்ம் பகுதிக்கு திரும்புமாறு ரகசிய உத்தரவிட்டார். ரஷ்யப் படைகள் ஆஸ்திரியாவுடன் கைகோர்ப்பதற்குள் வேகமாக குறுக்கே புகுந்த பிரெஞ்சுப் படைகள் ‘ஆஸ்ட்ரலிட்ஸ்’ எனும் இடத்தில் ஆஸ்திரியப் படையைச் சிதறடித்து ஆயிரக்கணக்கான வீரர்களைச் சிறைப்பிடித்தனர்.
பிரிட்டனுடன் கடற்போரில் தோற்றாலும், இன்னொரு எதிரியை புரட்டியெடுத்த திருப்தி நெப்போலியனுக்கு. அந்த திருப்தியுடன், தான் பேரரசனானதன் முதலாண்டு நிறைவைக் கொண்டாடினார் 1805-ம் ஆண்டு!
1806- 1807-ல் ரஷ்யப் படைகளுக்கு எதிராக போலந்தில் தொடர் வெற்றிகளைப் பெற்ற நெப்போலியனுடன் வேறு வழியின்றி டில்சிட் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது ரஷ்யா.
1807-ம் ஆண்டு ஐரோப்பாவையே இரு பிரிவாகப் பிரித்தார் நெப்போலியன். அன்றைய பிரஸ்யா வரையிலான (ஜெர்மனி) பகுதி முழுக்க நெப்போலியன் வசம் வந்தது. அந்தப் பிரதேசத்திலிருந்த நாடுகளிலெல்லாம் தனது நண்பர்களையும் உறவினர்களையும் நியமித்தார் நெப்போலியன்.
பிரிட்டனுக்கு எதிரான பொருளாதாரத் தடை!
கிட்டத்தட்ட ஐரோப்பாவே தனது பிடிக்குள் வந்துவிட்டதை உணர்ந்த நெப்போலியன் உனடியாக இதனை பிரிட்டனுக்கு எதிராகப் பயன்படுத்த திட்டமிட்டார். பொருளாதாரத் தடையை அறிவித்தார், கான்டினென்டல் சிஸ்டம் எனும் பெயரில். பிரிட்டனுடன் எந்த நாடும் வர்த்தக உறவு, பொருள்களை இறக்குமதி – ஏற்றுமதி செய்யக்கூடாது, பிரிட்டிஷ் கப்பல்களைப் புறக்கணித்தல் போன்றவை இந்த தடைக்குள் அடங்கும்.
ஆனால் நெப்போலியன் எதிர்பார்த்த மாதிரி இது அத்தனை வெற்றிகரமாக நிறைவேறுவதாகத் தெரியவில்லை. காரணம் கடலில் பிரிட்டன் அசைக்க முடியாத சக்தி. எனவே திருட்டுத்தனமாக பிரிட்டனுடன் வர்த்தக உறவைத் தொடர்ந்தனர் நெப்போலியன் கட்டுப்பாட்டிலிருந்த நாட்டினர்.
குறிப்பாக போர்ச்சுக்கல், நெப்போலியனின் ஆணையை அப்பட்டமாக மீறியது. கடும் கோபம் கொண்ட நெப்போலியன் ஸ்பெயின மற்றும் போர்ச்சுக்கள் நாடுகளை ஆக்கிரமித்தார். தனது படையில் மிகத் தேர்ந்த, திறமை வாய்ந்த 3 லட்சம் வீரர்களை இதில் ஈடுபடுத்திவிட்டு இவர் பிரான்ஸ் திரும்ப, பிரிட்டன் – போர்ச்சுக்கள் மற்றும் ஸ்பெயின் கொரில்லாப் படை ஒன்று சேர்ந்து நெப்போலியன் படையை சிதறடித்தன. இதனை தீபகற்பப் போர் என்கிறது சரித்திரம். இதில் நெப்போலியனுக்கு பெரும் இழப்பு, ராணுவ-பொருளாதார ரீதியாக.
இதுதான் மிகப்பெரிய அடியாக விழுந்தது நெப்போலியனுக்கு. “வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு இந்த தீபகற்பப் போர்கள்தான்” என்று பின்னர் ஒருமுறை அவரே கூறியுள்ளார்.
1809-ம் ஆண்டு மீண்டும் ஒரு பெரும் போருக்கு தயாராகின பிரெஞ்சுப் படைகள். இம்முறையும் பிரிட்டன்தான் ஆஸ்திரியாவை நெப்போலியனுக்கு எதிராகத் தூண்டிவிட்டது.
அந்த நேரத்தில் போப் ஆண்டவர் கட்டுப்பாட்டில் இருந்த பல நாடுகள் நெப்போலியனின் பொருளாதாரத் தடையை ஏற்க மறுத்தன. எனவே அந்த நாடுகளையெல்லாம் பிரெஞ்சு சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார் நெப்போலியன். ஒரு சிறிய படைப்பிரிவு ரோமிலிருந்து போப் ஆண்டவரையே கடத்திச் சென்றுவிட்டது. ஆனால் இப்படிச் செய்யும்படி நெப்போலியன் சொல்லவில்லை. எனவே போப் விடுதலை குறித்தும் அவர் அலட்டிக் கொள்ளவில்லை. 1814-ம் ஆண்டு வரை போப் ஆண்டவரால் வாடிகனுக்கு திரும்ப முடியவில்லை!
இதற்கிடையே, நெப்போலியன் மனைவி ஜோஸப்பின் விவாகரத்து பெற்றுவிட, 1910-ல் மேரி லூசி என்ற ஆஸ்திரிய இளவரசியை திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்துக்கு வராமல்போன கார்டினல்களுக்கெல்லாம் நெப்போலியன் தண்டனை கொடுத்தார்.
thanks to
தொத்தார்கோட்டை. ம. ராமச்சந்திரன் எழுதியவை
No comments:
Post a Comment