Monday, July 18, 2011

தூக்கத்தில் ஏற்படும் கனவுகள்

தூக்கத்தில் ஏற்படும் கனவுகள் ஓர் ஆய்வு !

தூக்கத்தில் ஏற்படும் கனவுகள். (ஓர் அறிவியல் மற்றும் ஆன்மீக ஆய்வு)

கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும். மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலைவை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி)    நூல்: முஸ்லிம் 4200

மேலுள்ள நபிமொழியிலிருந்து இந்த உலகில் பிறந்து வாழ்ந்து மடிந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற, வாழப்போகின்ற அனைவருக்கும் கனவு எனும் உணர்வு பொதுவானது. தூக்கத்தின்போது கனவு ஏற்படாத மனிதன் யாருமே இல்லை என்று உறுதியாகக் கூறும் அளவிற்கு கனவு எல்லா மனித வாழ்க்கையிலும் ஒரு பொதுவான அம்சமாக விளங்குகின்றது. 

விஞ்ஞானம் கனவுகள் பற்றி என்ன சொல்கின்றது?

மனோதத்துவயியலின் படி கனவின் வரைவிலக்கனமானது தூக்கத்தின் போது மனித மூளையில் ஏற்படும் ஒரு இரசாயன மாற்றமாகும். பௌதீக மனோதத்துவவியலில் பதிவு செய்யப்படும்; மூளையின் மின் அலைகள் (EEG)இ கண் அசைவுகள் (EEG), தசைகளின் இயக்கம் (EEG) ஆகியவற்றின் ஆதாரத்துடன் தூக்கத்தின் நிலைகள் நான்காகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது.

தூக்கத்தின் நிலைகள்.

தூக்கம் பற்றிய ஆய்வுலகில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. 

1.விழிப்பு நிலை (wakefulness)

2.அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை{non- REM(rapid eye movement)}

3.அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM slee) - இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை.

4.ஆழ்ந்த தூக்க நிலை (deep sleep)

1.விழிப்பு நிலை (wakefulness)

இரண்டாவது நிலையை அடைவதற்கு சில நிமிடங்களிற்கு முன்னுள்ள நிலை. இந்த நிலையை விஞ்ஞான அறிவியலில் உலக இயல்பை மீறிய மாய சக்தியுள்ள நிலை என்று வர்ணிக்கின்றனர். அதிகளவான அல்லது குறைந்த தூக்கத்தை தூண்டக்கூடிய பிரதிமையாகவுள்ள ‘hypnogogic imagery’ எனும் தூக்க நிலையாகும்.

2.அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை {non- REM (rapid eye movement)}

ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டுச் செல்லும் நிலை. இந்த நிலையிலே இலேசான தூக்கத்திலுள்ளவர்களுக்கு கனவுகள் வருவதற்குரிய சாத்தியங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் குறைவான கண் அசைவும் (EOG)இ தசை இயக்கங்கள் குறைவாகவும் (EMG)இ மூளையின் மின் அலைகள் {non- REM(rapid eye movement)}


3.அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM sleep)

இந்நிலையில் மூளையின் மின் அலைகள் 1-2Hz “delta” அலைகளாக மாறும். நான்காவது நிலையான ஆழ்ந்த உறக்க நிலை இதிலிருந்து ஆரம்பமாகும். விழி அசைவுகளற்றதாகவும், குறைந்த தசை இயக்கங்களும் காணப்படும். தூங்குபவர் திடீரென எழுந்தால் அவர் கனவு கண்டுகொண்டிருப்பாரேயானால் கனவு இந்நிலையில் ரத்து செய்யப்படும்.

4.ஆழ்ந்த தூக்க நிலை (deep sleep)

ஆழ்ந்த உறக்கம் நிலவும் நிலை. இந்நிலைகளைத் தாண்டி கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்குப் பின் இந்நிலைகள் பின்னோக்கியதாக நடைபெறும். அதாவது கடைசியிலிருந்து முதல் நிலை வரை. இந்த வகையில் முதல் நிலையில் தசை இயக்கம் குறைவாகவும், விழி அசைவற்றதாகவும் இருக்கும். deep sleep என்ற விஞ்ஞானியின் கருத்துப்படி இந்த நிலை கனவு தெரிபடுவதற்கான உச்ச கட்ட நேரமாகும். இந்த நிலை 5-15 நிமிடங்கள் நீடிப்பதோடு அதி வேக விழி அசைவு தூக்க நிலை ஒரு மணித்தியால அளவிற்கு கூடுவதற்கு ஏதுவாக அமையும். அதி வேக விழி அசைவு தூக்க நிலையின் கால எல்லை கூடுதலாகவும், குறைவாகவும் அமையலாம். காலை நேரங்களிலே இந்த நிலையில் கூடுதலாக கனவுகள் தென்படும்.   

இஸ்லாம் கனவுகள் பற்றி என்ன சொல்கின்றது?

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன், ஞானமிக்கவன்.  (அல்குர்ஆன் 42:51)

இறைவனுடைய தூதர்களான நபிமார்களுக்கு நான்கு வழிகளில் இறைச் செய்திகள் கிடைத்தன. 

1.நேரடியாக இறைவன் தனது தூதர்களிடம் பேசுதல்.

2.வானவரை அனுப்பி அவர் வழியாக தனது செய்திகளைக் கூறி அனுப்புதல்.

3.தான் சொல்ல நினைக்கும் செய்தியைத் தனது தூதரின் உள்ளத்தில் உதிக்கச் செய்தல்.

4.கூற வேண்டிய செய்திகளைக் கனவின் வழியாகக் காட்டுதல்.

இந்த நான்கு வழிகளில் முதலிரண்டு வழிகள் இறைத்தூதர்களுக்கு மட்டும் உரியது. மூன்றாவது வகையான உள்ளுணர்வை ஏற்படுத்துதல் அவ்வப்போது இறைத் தூதர்கள் அல்லாத மனிதர்களிடமும் ஏற்படலாம்.

மூஸா நபியின் தாயாருக்கு இத்தகைய வஹீயை அனுப்பியதாக 20:38 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! (அல்குர்ஆன் 20:38)

தான் அறிவித்த செய்தியைப் பற்றி இவ்வசனங்களில் குறிப்பிடும் போது வஹீ என்ற சொல்லையே இறைவன் பயன்படுத்தியுள்ளான். இத்தகைய முன்னறிவுப்புக்களில் மார்க்கம் தொடர்பான முன்னறிவிப்புக்கள் நபிமார்களுக்கு மட்டும் உரியது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடைசி நபியாக இருந்த காரணத்தினால், நபியவர்களின் மறைவிற்குப் பின் மார்க்கம் தொடர்பான முன்னறிவிப்புக்களின் வருகையும் நிறுத்தப்பட்டு விட்டது. மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்ற வசனமே இதற்குப் போதிய ஆதாரமாகும்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை நான் முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக நான் பொருந்திக் கொண்டேன்’  (அல்குர்ஆன் 5:3) 

எனவே, கனவின் மூலமோ, உள்ளுணர்வை ஏற்படுத்துவதன் மூலமோ அல்லாஹ் தான் நாடியதை (மார்க்கம் தவிர்ந்த) மனிதர்களுக்கு அறிவிப்பான்.

நபித்துவமும், தூதுத்துவமும் முற்றுப் பெற்று விட்டன. எனவே எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. எந்த ரஸ_லும் (தூதரும்) இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இது மக்களுக்குக் கவலையளிப்பதாக இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனினும் நற்செய்தி கூறுபவை உள்ளனஎன்றார்கள். நற்செய்தி கூறுபவை என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டபோதுமுஸ்லிம் காணும் கனவாகும். இது நபித்துவத்தின் ஒரு பகுதியாகும்என்று விடையளித்தனர். 
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)    நூல்: அஹ்மத் 13322

எனவே, இந்த நபி மொழியில் இருந்து கனவின் மூலமாகவும் மனிதர்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவான் என்பது புலனாகின்றது. அத்தோடு மனிதனுக்குத் தென்படும் கெட்ட கனவு பற்றியும் நபியவர்கள் தெளிவுபடுத்தவும் தவறவில்லை.

நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும். கேட்ட கனவு ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். தனக்கு அச்சத்தை ஏற்படுத்தும் கெட்ட கனவை ஒருவர் கண்டால் தனது இடது புறத்தில் துப்பி விட்டு அதன் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். இவ்வாறு செய்தால் அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாதுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)   நூல்: புகாரி 3292

கனவுகள் பற்றிய விஞ்ஞான, இஸ்லாமிய கருத்துக்களை ஒப்பிடுதல்.

இஸ்லாத்தைப் பொருத்த வரை தூக்கமும் ஒரு வித மரணமேயாகும். அதாவது அல்லாஹ் நாம் தூங்கும்போது நம் உயிரைக் கைப்பற்றுகிறான்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.  (அல்குர்ஆன் 39:42)

அவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான். நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை எழுப்புகிறான். உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:60)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூங்கும் போதும், தூங்க முன்னரும், தூங்கி எழுந்ததும் ஓதுவதற்குக் காட்டித் தந்த துஆக்கள் பின்வருமாறு:

தூங்கும் போது,

இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன் (தூங்குகிறேன்), உன் பெயரால் உயிர் பெறுகிறேன் (விழிக்கிறேன்). (புஹாரி 7395, முஸ்லிம் 4886) 

தூங்கும் முன்,

இறiவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறiவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்.  (முஸ்லிம் 4887)

படுக்கையை உதறி விட்டு,

என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன் (படுக்கிறேன்). உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன் (எழுகிறேன்). என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! (புஹாரி 5845)

தூங்கி எழுந்ததும்,

எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.  (புஹாரி 6312, 6314, 6324, 6325, 7395)

மேலுள்ள ஹதீஸ்களின் படி நாம் தூங்கும் போது இறைவன் நம் உயிரைக் கைப்பற்றி தூக்கத்திலிருந்து எழும்போது நம் உயிரை மீள அளிக்கிறான். விஞ்ஞானமும் இதை ஊர்ஜிதம் செய்கின்றது. அதாவது தூக்கத்தை வர்ணிக்கும் விஞ்ஞான அறிவியல் தூக்கத்தின் போது மனித மூளையில் இரசாயன மாற்றம் ஏற்படுவதாகவும், தூக்கமானது உலக இயல்பை மீறிய நிலை எனவும் கூறுகின்றது. 

எனவே, இந்த இடத்திலும் விஞ்ஞானம் இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது.
http://tndawa.blogspot.com/

Sunday, July 17, 2011

மனு சாத்திரம்

திண்ணையில் மலர்மன்னன் பார்ப்பனீய பார்வையில் மனுசாத்திரத்தை பற்றி எழுதிய கட்டுரையை ஜடாயு என்கிற பதிவர் ஒரு பதிவு செய்திருந்தார். ஆறாம்திணையில் மனுசாத்திரம் பற்றி திரு. ஆ. சிவசுப்பிரமணியன் "மனு சாஸ்திரம் ஓர் அறிமுகம்" என எழுதிய கட்டுரையில் மலர்மன்னனுக்கு பதில் இருக்கிறது என்பதால் எந்த மாற்றமும் செய்யாமல் அந்த கட்டுரையை பதிவு செய்கிறேன். நல்ல ஒரு கட்டுரையை எழுதிய திரு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கும், ஆறாம்திணைக்கும் மனமார்ந்த நன்றிகள்.
-000-

காலத்தால் முந்திய வடமொழி நூல்களாக வேதங்கள் அமைந்திருக்கின்றன. வேதங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவான நீதி நூல்கள் 'ஸ்மிருதிகள்' என்றழைக்கப்படுகின்றன. இவை முனிவர்களால் கூறப்பட்டவை என நம்புகிறார்கள்.

தர்ம சாத்திரங்கள்
நித்திய கருமங்கள்
ஆசாரம்
விவகாரம்
பிராயச்சித்தம்
இராச தர்மம்
வருணாசிரமம்
அக்நி கார்யம்
விரதம்

ஆகியன தொடர்பான விதிமுறைகளை இவை குறிப்பிடுகின்றன. ஸ்மிருதிகள் மொத்தம் பதினெட்டாகும். (19 என்ற கருத்தும் உண்டு) இவற்றுள் மிகப் பரவலாக அறிமுகமாகி இன்றளவும் பேசப்படுவது 'மனு தர்ம சாஸ்திரம்' என்ற மனுஸ்மிருதி ஆகும்.

மனுஸ்மிருதி

இந்த நூலானது இதை இயற்றியவரின் பெயராலேயே பெயர் பெற்றுள்ளது. மனு என்ற பெயரில் ஏழு பேர் இருந்தனர் என்றும் ஏழாவது மனுவே இந்நூலை இயற்றியவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் மனு என்பது ஒரு தனி மனிதனின் பெயர் அல்லவென்றும் நீதிநெறிகளை வகுக்கும் பதவியின் பெயரென்றும் சிலர் கூறுவர்.

ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட 'மாணவ தர்ம சாஸ்திரம்' என்ற நூல் வாய்மொழியாக வழங்கி வந்துள்ளது.

அந்நூலை மூல நூலாகக் கொண்டு மனுதர்ம சாஸ்திரம் உருவாகியுள்ளது. 12 அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்ட இந் நூலில் 2684 சுலோகங்கள் இடம் பெற்றுள்ளன.

நூல் நுவலும் செய்தி
வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய கடமைகள், மன்னன் ஆட்சி புரிய வேண்டிய முறையும், தண்டனையும், வழங்க வேண்டிய முறையும், பல்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆண் பெண்களிடையே நிலவும் சமூக உறவுகள், கணவன் மனைவியர் ஒழுக்க நியதி, பிறப்பு இறப்புச் சடங்குகள், குற்றங்களும் அவற்றிற்கான கழுவாய்களும், மறுபிறவி போன்றவை அந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் பின்வரும் ஐந்து கருத்துக்களை அழுத்தமாக வலியுறுத்துகின்றது.

1. நால் வருணப்படி நிலை
2. இதில் பிராமணிய மேலாண்மையும், கீழ் வருணங்களின் −ழிநிலையும்
3. உடல் உழைப்பு இழிவானது. எனவே அதை மேற்கொள்வோரும் இழிவானவர்.
4. நால் வருணத்திற்கு வெளியில் உள்ள சண்டாளர்கள் என்ற பிரிவினர் பின்பற்ற வேண்டிய கொடூரமான கட்டுப்பாடுகள்.
5. பெண்ணடிமை

நூலின் காலம்

இந் நூலானது கி.மு. 170 க்கும் 150 க்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், மெளரியர்களின் புத்த மத அரசுக்கு எதிரான பிராமணப் புரட்சியின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் பிராமணியச் சட்டத் தொகுப்பாகவே இது வெளிவந்துள்ளது என்றும் அம்பேத்கர் (1995:165-166) கூறுகிறார்.

நூல் உருவான வரலாறு
சுவாயம்பு மநுவான பிரம்மனிடம் முனிவர்கள் சென்று ''ஞான நிறைவும், வல்லமையும், செல்வமும், வீறும், திறலும், ஒளியும் பெற்றுத் திகழும் பெருமானே, நால்வருணந்தரும் மற்றோரும் கடைபிடிக்கத்தக்க அவரவர் செயல்கள், கடமைகளை எமக்கு உணர்த்துவீராக! என்று வேண்ட, பிரம்மா இவ்வுலகம் உருவான முறையையும் நாராயணன் என்ற பரம்பொருள் குறித்தும் உயிர்களின் தோற்றம் குறித்தும் கூறி விட்டு (சூத்திரம் 5 முதல் 56 முடிய) பின் ''எனது குமாரரான பிருகு இந்தத் தர்ம சாத்திரத்தைச் சற்றும் பிறழாமல் உங்கட்கு உபதேசிக்கக் கடவர். ஏனெனில் முறையாக என்னிடம் பிருகு முனிவரே இதனைப் பயின்று கைவரப் பெற்றவராகிறார்'' என்று கூற, பிருகு முனிவர் முனிவர்களை நோக்கிக் கூறிய செய்திகளே மநு தர்ம சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

இக் கருத்தை அம்பேத்கர் (1995 : 165-166) ஏற்றுக் கொள்ளவில்லை.

''மனு என்ற பெயருக்கு இந்தியாவின் பண்டைக்கால வரலாற்றில் பெரும் மதிப்பு இருந்தது. சட்டத் தொகுப்புக்கு இந்த மதிப்பின் மூலம் பெருமை சேர்க்கும் நோக்கத்துடனேயே அதை மனு வெளியிட்டதாகக் கூறப்பட்டது. இது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு மோசடி என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. சட்டத் தொகுப்பில் அதை இயற்றுபவரின் பெயரைக் குறிப்பிடும் இடத்தில் பண்டைக்கால வழக்கப்படி பிருகு என்ற குடும்பப் பெயர் கூறப்பட்டுள்ளது. 'மனு தர்ம சாஸ்திரம்' என்ற தலைப்பில் பிருகு இயற்றிய நூல்'' என்பதே அதன் உண்மையான தலைப்பு ஆகும். தொகுப்பின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பிருகு என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நமக்கு அதை இயற்றியவரின் குடும்பப் பெயர் தெரிகிறது. அவருடைய சொந்தப் பெயர் நூலில் தெரிவிக்கப்படவில்லை. நாரத ஸ்மிருதியை எழுதியவருக்கு மனு ஸ்மிருதியை இயற்றியவரின் பெயர் தெரிந்திருந்தது. அவர் அந்த இரகசியத்தை வெளியிடுகிறார். மனு சாஸ்திரத்தை இயற்றியவர் சுமதி பார்கவா என்பது கட்டுக்கதைகளில் வரும் பெயர் அல்ல. அவர் வரலாற்றில் இடம்பெற்ற ஒருவராகவே இருக்க வேண்டும். ஏனென்றால் மனுவின் சட்டத் தொகுப்புக்கு உரை எழுதிய மேதாதிநே கூட இந்த மனு ஒரு குறிப்பிட்ட நபர் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். எனவே மனு என்பது மனுஸ்மிருதியின் உண்மையான ஆசிரியரான சுமதி பார்கவாவின் புனை பெயராகும். இந்நூல் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதைப் பின்வரும் சூத்திரங்களால் அறியலாம்.

தர்மங்களுக்கு ஆதாரமாக இருப்பவை வேதமும், ஸ்மிருதிகளும் தொன்று தொட்டு வந்த ஒழுக்க மரபும் கவலையற்ற மன நிறைவுமாகும். (2 : 6)

மனுவினால் கட்டளையிடப்பட்ட நீதிகள் அனைத்தும் வேதத்தில் விதிக்கப்பட்டவையே. ஏனெனில் அவர் வேதசாரமுணர்ந்த பிரம்ம ஞானி. (2 : 7)

வேத சத்யத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்தவையென்று தனது ஞானத்தால் உணர்ந்து அவ்வறத்தாறு ஒழுகுவோனே உண்மையான கல்விமான். (2 : 8)

சுருதி, ஸ்மிருதிகளில் சொல்லப்படா நின்ற அறங்களை மேற்கொண்டு ஒழுகுவோன் யாரோ, அவனே இம்மையில் புகழையும் மறுமையில் சுத்தமான சுகத்தையும் பெறுவான். (2 : 9)

வேதமே சுருதியென்றும் அறத்துணிபுகளே ஸ்மிருதியென்றும் உணர்க.... (2 : 10)

மனு தர்ம சாஸ்திரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்ற செய்தியும் பிரம்மன் மற்றும் பிருகு முனிவர் ஆகியோரால் இது கூறப்பட்டது என்ற செய்தியும் மனுதர்ம சாஸ்திரம் புனிதமானது, உயர்வானது, ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தை நிலை நாட்ட உதவுகிறது. இனி மனு தர்ம சாஸ்திரத்தின் சுலோகங்கள் சிலவற்றைக் காணலாம்.

பிராமணர் உயர்வு

''மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31).

இந்தச் சூத்திரத்தின் அடிப்படையில் இறைவனுடைய முகத்தில் பிராமணர் தோன்றியுள்ளனர். இதன் காரணமாகப் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்பதைப் பின்வரும் சுலோகங்களில் வலியுறுத்துகிறார்.

''புருஷ தேகம் சுத்தமானது. இடைக்கு மேல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது (1 : 92).மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் அந்தணன் சிறந்து விளங்குகின்றான். (1 : 93)

சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (1 : 94).
மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே ஜீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (1 : 99).பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (1 : 100).

எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்யவராயுமிருக்கிறார்கள் (1 : 101).

இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு அதை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிடுகின்றார். மங்களம் மற்றும் மேன்மையைக் குறிக்கும் வகையில் பிராமணனது பெயர் அமைய வேண்டும் (2:31, 32) என்றும் பிராமணர் உணவு அருந்தும்போது மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்றும் (2 : 176-178) வலியுறுத்துகிறார். தவறு செய்யும் பிராமணர்களுக்கு விதிக்க வேண்டிய தண்டனைகள் குறித்து மனு கூறும் செய்திகள் வருமாறு.

'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).

பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379).

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).

அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412).

சத்திரியர் - வைசியர் - சூத்திரர் நிலை
இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு, சத்திரியர், வைசியர், சூத்திரர்களின் பணி மற்றும் சமூகநிலை குறித்துப் பின்வருமாறு வரையறை செய்துள்ளார்.

''பிரஜா பரிபாலனம் செய்வது, ஈகை, வேள்விகள் புரிவது வேத பாராயணம் செய்விப்பது, விடிய சுகங்களில் மனதை அலைய விடாமல் உறுதியாக நிற்பது மன்னர் கடமையாகும். (1 : 89)

வாணிபர்க்கு ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், வட்டிக்கு விடுதல், பயிர்த்தொழில் செய்தல் ஆகியவற்றை விதித்தார். (1 : 90)

ஏவலான மக்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும், ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் பணித்தார் (1 : 91).
நான்கு வருணத்தாரின் கடைசி வருணமான சூத்திர வருணத்தவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்ற கருத்தை மனு உறுதிபடக் கூறுகிறார்.

''நாலாம் வருணத்தோன் அரசனாகயிருக்கும் நாட்டிலும் அறம் அறியாதோரும், தீயழுக்கமுடையோரும் வசிக்கும் கிராமத்திலும், பாவிகள் அருகுறையும் ஊரிலும் வசிக்கக் கூடாது. (4 : 61).
மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (8 : 21)

நாலாம் வருணத்தாரும் நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற் போகின்ற நாடு வறுமை வாய்ப்பட்டு விரைவில் அழிந்து போகும் (8 : 22).

அனுஷ்டானங்களில்லாத அந்தணன் மன்னன் சார்பாகத் தீர்மானங்களைச் செய்யவும் கூடும். நாலாம் வருணத்தவன் செய்யக்கூடாது.

வைசியனையும், நாலாம் வருணத்தானையும் தன் தன் தொழிலைச் செய்யுமாறு மன்னன் கட்டளையிடுக. இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து விடுவார்கள். (8 : 417)

...... இழி பிறப்பாளர் பெருகி வரும் நாடு விரைவில் குடிமக்களுடன் அழியும் (10 : 61).

பிராமணனின்றி சத்திரியனுடைய சதகருமங்களும் சத்திரியனின்றி அந்தணனின் ஜீவனமும் நடைபெறாதாகையால், ஒருவரை ஒருவர் சார்ந்து நின்றால் இம்மை மறுமைகளின் இன்பங்களை அடையக் கடவர் (9 : 322).

வருணமற்றவர்
நான்கு வருணத்திற்கும் அப்பால், சண்டாளர் என்ற சாதியை மனு குறிப்பிடுகின்றார்.

தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர். (10 : 47 - 49)
இவர்கள் வாழும் இடமாக ''இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்'' (10 : 50) என்று குறிப்பிடுகின்றார்.

சண்டாளர்களின் இருப்பிடம், மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய தொழில், வாழ்க்கைமுறை தொடர்பாக மிகவும் இழிவான கட்டுப்பாடுகளை மனு விதித்துள்ளார்.

''ஊருக்கு வெளியில் சண்டாளனும், ஸ்வபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது'' (10 : 52)

''இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும்'' (10 : 52).
''நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும்'' (10 : 53).

''இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது'' (10 : 54).

''அரசன் கொடுத்த அடையாளத்துடன், தங்களிடமுள்ள பொருளை விற்கவும், ஒன்றை வாங்கவும், பகலில் ஊர்த்தெருக்களில் திரியலாம். அனாதைப் பிணத்தை அகற்றுதலும் இவர்கள் கடன்'' (10 : 55).
''மரண தண்டனை பெற்றவரைக் கொல்லுதலும் இவர்கள் தொழில். தண்டனை நிறைவேற்றப்பட்டவரின் உடை, அணி, படுக்கைகளை இவர்கள் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்'' (10 : 56).
இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, இவர்கள் சொர்க்கம் போவதற்கான வழியையும் மிக எளிதாகக் காட்டுகிறார்.

''அந்தணன், ஆ, பசு, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு'' (10 : 62).
பெண்கள்
அடுத்து பெண்கள் குறித்த மனுவின் கருத்துக்களைக் காண்போம்.

''எந்தப் பருவத்தினவளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச் செயலும் இயற்றலாகாது'' (10 : 147)

''இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது'' (10 : 148).

''இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக'' (10 : 154).

''அன்றாட வேள்விகள் ஐந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு'' (9 : 14).

''நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை'' (9 : 15).

இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17).

'படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்' (9 : 17).

மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (9 : 18).

மனு தர்ம எதிர்ப்பு
இத்தகைய அதர்ம சாஸ்திரத்திற்கு எதிரான கருத்துக்கள் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சித்தர்களும், வடபுலத்தில் தாந்திரிகர்களும் மனுதர்மத்தின் நால்வருணக் கோட்பாடுகளுக்கு எதிராக உரக்கக் குரல் எழுப்பியுள்ளனர். மனு - மனு தர்மம் என்ற சொற்களைப் பயன்படுத்தாவிட்டாலும் இந் நூலின் வருணக்கோட்பாடுகளுக்கு மாறான கருத்துக்களை முன்மொழிந்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் மஹத் என்னும் நகரில் நடந்த தலித்துகள் மாநாட்டில் 1927 டிசம்பர் 25 - ஆம் நாள் மனு தர்ம சாஸ்திரத்தை எரிக்கும் பின்வரும் தீர்மானம் நிறைவேறியது. (அம்பேத்கர் 1997 : 197, 198)

''இந்துச் சட்டங்களின் பிதா எனக் கருதப்படும் மனுவின் பெயரால் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பவையும், மனு ஸ்மிருதியில் அடங்கியிருப்பவையும், இந்துக்களின் சட்டத்தொகுப்பான அங்கீகரிக்கப்பட்டிருப்பவையுமான இந்துச் சட்டங்கள், கீழ்ச்சாதியினரை அவமதிப்பவையாக இருக்கின்றன. மனித உரிமைகளை அவர்களுக்கு மறுப்பவையாக உள்ளன. அவர்களது ஆளுமையை நசுக்குபவையாக இருக்கின்றன. நாகரிக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுடன் இவற்றை ஒப்பிடும்போது இந்த மனு ஸ்மிருதி எத்தகைய நன்மதிப்பையும் பெற அருகதையற்றது. ஒரு புனிதமான நூல் எனப் போற்றப்படுவதற்குத் தகுதியற்றது என இந்த மாநாடு கருதுகிறது. இதன்பால் தனக்குள்ள ஆழமான அளவிட முடியாத வெறுப்பை வெளிப்படுத்தும் பொருட்டும், மதம் என்ற போர்வையில் அது சமூக ஏற்றத் தாழ்வைப் போதித்து வருவதைக் கண்டித்தும் மாநாட்டு நடவடிக்கைகளின் முடிவில் இதன் பிரதி ஒன்றை எரிப்பதென இம் மாநாடு தீர்மானிக்கிறது''.

இதன்படி இரவு ஒன்பது மணிக்கு மாநாடு நடக்கும் இடத்தில் பலிபீடம் போல் அமைக்கப்பட்டு மனு நீதி நூல் அதன் மேல் வைக்கப்பட்டது. தீண்டத்தகாத சாதிச்சாமியார்கள் சிலர் முறைப்படி அதற்கு நெருப்பு மூட்டித் தகனம் செய்தனர். மனுநூலின் தகனம் முடிந்த பின் அம்பேத்கர் எழுந்து ''ஏற்றத்தாழ்வை வற்புறுத்தும் நீதிநெறி இனி பாரதத்தில் செல்லாது என உலகம் தெரிந்து கொள்ளட்டும்'' என்று முழங்கினார். (வசந்த்தின் 1995:56)

இந் நிகழ்ச்சி குறித்து அம்பேத்கர் பின்வருமாறு எழுதினார்:''இந்து சமூக அமைப்பு என்னும் கட்டுமானம், மனு ஸ்மிருதி என்ற அடித்தளத்தின் மீது நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த மனுஸ்மிருதி இந்து சமய நூல்களின் ஒரு பகுதி. எனவே அது எல்லா இந்துக்களுக்கும் புனிதமாக உள்ளது. புனிதமானது என்பதால் பிழைபாடற்றதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு இந்துவும் அதன் புனிதத்தில் நம்பிக்கை வைக்கிறான். அதன் ஆவணங்களை ஏற்று நடக்கிறான். மனு, சாதியையும் தீண்டாமையையும் ஆதரித்து நிற்பதோடு அதற்குச் சட்ட வலுவையும் தருகிறார். எனவே, ஒரு அபகீர்த்தி வாய்ந்த மனுஸ்மிருதியை எதிர்த்தது ஒரு துணிகரமான செயலாகும். இந்து சமயம் என்ற கொத்தளத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். பிரான்சில், பாஸ்டில் சிறை எவ்வாறு கொடுங்கோன்மையின் உருவகமாக இருந்ததோ அவ்வாறே இந்து வாழ்க்கை முறைக்கும் சிந்தனைப்போக்குக்கும் அடிநாதமாக இருந்த ஏற்றத்தாழ்வுகளின் உருவகமாக இருந்தது மனுஸ்மிருதி. பாஸ்டிலின் வீழ்ச்சி பிரான்சிலும் ஐரோப்பாவிலும் பரந்த மக்கள் பகுதியினரின் விடுதலையையும் வெற்றியையும் எவ்விதம் குறித்ததோ அவ்விதமே 1927 ஆம் ஆண்டு மஸத்தில், மனுஸ்மிருதி எரிக்கப்பட்ட நிகழ்ச்சி தீண்டப்படாத மக்களின் விடுதலை வராற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகத் திகழ்ந்தது.''

மனு தர்மத்தின் மீது இத்தகைய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதற்கு முக்கியக் காரணம் என்ன? என்பதை அப்பேத்காரே (1997-232) குறிப்பிடுகிறார்.
''சதுர்வருணமாக சமுதாயத்தை நான்கு வகுப்புகளாகப் பிரிப்பது மனுவுக்கும் பிரதானமானதாக இருக்கவில்லை. ஓர் அர்த்தத்தில், அது அவருக்கு இரண்டாம்பட்சமானதாகவே இருந்தது. சதுர் வருணத்திற்குள் இருப்போரிடையேயான ஓர் ஏற்பாடாகவே இதனை அவர் கருதினார். ஒருவன் பிராமணனா, சத்திரியனா, வைசியனா அல்லது சூத்திரனா என்பது பலருக்கு முக்கியமானதல்ல. இது அவருக்கு முன்பே இருந்து வருகின்ற ஒரு பிரிவினை. −ந்தப் பிரிவினையை மேலும் தீவிரப்படுத்தி அதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தார். இந்தப் பிரிவினை அவரிடமிருந்து தோன்றியதல்ல. மாறாக மனுவிடமிருந்து ஒரு புதிய பிரிவினை தோன்றியது.

1. சதுர் வருண அமைப்புக்குள் இருப்பவர்கள்.
2. சதுர் வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்கள்

என்பதே இந்தப் பிரிவினை. இந்தப் புதிய சமூகப் பிரிவினை மனுவிடமிருந்து உதித்ததாகும். இந்துக்களின் பண்டைத் தர்மத்துக்கு அவரது புதிய சேர்ப்பு இது. இந்தப் பிரிவினை அவருக்கு அடிப்படையானதாக, மூலாதாரமானதாக, இன்றியமையாததாக இருந்தது. ஏனென்றால் அவர்தான் இந்தப் பிரிவினையை முதலில் உருவாக்கியவர். அதற்குத் தனது அதிகார முத்திரை அளித்து அதனை அங்கீகரித்தவர்!

பிடல் காஸ்ட்ரோ…



பிடல் காஸ்ட்ரோ…
1926 ஆகஸ்டு 13 – கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு
1945-50 – அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார்.
1952 – நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஜெனரல் குல்ஜெம்சியோ பத்திஸ்தா தலைமையிலான இராணுவக் கவிழ்ப்புக்குப் பின் தேர்தல் நீக்கம் செய்யப்படுகிறது.
1953 – சூலை 26 காஸ்ட்ரோ தலைமையில் சாந்தியாகோ டி கியூபாவில் மன்காடா பாசறை மீது நடைபெற்ற தாக்குதல் தோல்வி. காஸ்ட்ரோவும் தம்பி ரவுலும் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். ஈராண்டு கழித்து பொதுமன்னிப்பின் பகுதியாக விடுதலை.
1955 – சூலை 26 இயக்கத்தை கட்டுப்பாடுமிக்க கரந்தடிப் படையாகச் சீரமைக்க வேண்டி மெக்சிகோவுக்கு இடம் பெயர்கிறார்.
1956 திசம்பர் 2 – கிரான்மா என்ற கப்பலில் காஸ்ட்ரோவும் சிறிய புரட்சிக் குழுவினரும் கியூபா செல்கின்றனர். புரட்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களில் ரவுல், எர்னெஸ்டோ சே குவேரோ உள்ளிட்ட 12 பேர் கரந்தடிப் போர் நடத்துவதற்காக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்குச் செல்கின்றனர்.
1959 – காஸ்ட்ரோ தலைமையில் ஒன்பதாயிரம் வீரர் கொண்ட கரந்தடிப் படை அவானாவிற்குள் நுழைய, பத்திஸ்தா வேறு வழியின்றித் தப்பியோடுகிறார். காஸ்ட்ரோ தலைமை அமைச்சராகிறார்.
1960 – குருச்சேவ் தலைமையிலான சோவியத்து ஒன்றியத்தின் நெருக்கமான கூட்டாளியாகிறார். கியூபாவில் அமெரிக்க நலன்கள் அனைத்தையும் இழப்பீடின்றி நாட்டுடைமையாக்குகிறார். கியூபாவுடன் அரசநிலை உறவுகளை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது.
1061 – அமெரிக்க சி.ஐ.ஏ. பயிற்றுவித்த, 1,300 கியூப அகதிகள் அமெரிக்க ஆதரவுடன் பன்றிகள் விரிகுடாவில் நடத்திய படையெடுப்பு தோல்வி. காஸ்ட்ரோவுக்கு கியூப மக்கள் பேராதரவு.
1962 – கியூப ஏவுகணை நெருக்கடியால் அணுவாயுதப் போரின் விளம்பில் உலகம். துருக்கியிலிருந்து அமெரிக்க ஏவுகணைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்குப் பதிலாக கியூபாவிலிருந்து ஏவுகணைகளை அகற்ற சோவியத்து நாடு ஒப்புக் கொண்டதால் நெருக்கடி தீர்வு.
1976 – கியூபப் பொதுமைக் கட்சி புதிய சோசலிச அரசமைப்புக்கு ஒப்புதல் அளிக்கிறது. காஸ்ட்ரோ அதிபராகத் தேர்வு.
1976-81 அங்கோலாவிலும் எத்தியோப்பியாவிலும் சோவியத்து ஆதரவுப் படைகளுக்கு கியூபா இராணுவ ஆதரவு.
1980 – அகதி நெருக்கடி – சுமார் 1,25,000 கியூபர்கள் மேரியல் துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு ஓட்டம்.
1991 – சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் கியூபாவில் கடுமையான நிதி முடை.
1993 – கியூபா மீதான முப்பதாண்டு வணிகத் தடையை இறுக்குகிறது அமெரிக்கா. சரிந்து வரும் பொருளியலுக்கு முட்டுக் கொடுக்க காஸ்ட்ரோ அமெரிக்க டாலரை சட்டமுறைச் செல்லுபடியாக்குகிறார். வரம்புக்குட்பட்ட அளவில் தனியார் தொழில் முனைவை அனுமதிக்கிறார்.
1996 – கியூப அகதிகள் ஓட்டிச் சென்ற அமெரிக்க வானூர்திகள் இரண்டை கியூபா சுட்டு வீழ்த்தியபின் அமெரிக்க வணிகத் தடை நிரந்தரமாக்கப்படுகிறது.
2000 – ஆறு வயதான கியூப அகதி எல்லன் கோன்சாலஸ் புளோரிடாவிலிருந்து தாயகம் திரும்பச் செய்வதற்கான 7 மாத காலப் போராட்டத்தில் காஸ்ட்ரோவுக்கு வெற்றி!
2002 – ‘தீய நாடுகளின்’ அச்சில் கியூபாவையும் சேர்க்கிறது அமெரிக்கா.
2006 – சூலை – அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பை ரவுலிடம் கையளிக்கிறார்.
2008 – பிப்ரவரி 19. பொதுமைக் கட்சி ஏடு கிரான்மாவில் வெளியிடப்பட்ட கடிதத்தில் காஸ்ட்ரோ தமது பதவி விலகலை அறிவிக்கிறார்.

சே குவேரா…

 
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ஜுன் 14 1928 அக்டோபர்-9,1967(அர்ஜெண்டினாபிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு  கொண்ட  போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.
மார்க்ஸியத்தில் ஈடுபாடு
மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.
கியூபாவில் புரட்சி
சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடம் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடி போர்முறை  பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.
பொலிவியாவில் சேகுவேரா
பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் அக்டோபர் 9-1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்கு பெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)
அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தான். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார்.
தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.
இளமைக்காலம்
சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய ,பாஸ்க்கு,ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.
குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ்,போல்க்னா,கைடே,சல்காரி,வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா,காமுஸ்,லெனின் போன்றவர்களது நூல்களையும், ஏங்கெல்ஸ்,வெல்ஸ்,புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு லத்தீன் அமெரிக்
எழுத்தாளர்களானகுயிரோகா,அலெக்ரியா,இக்காசா,டாரியோஆஸ்ட்டுரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர் அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின்  அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவன்ஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.
பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலிவியா,பெரு,ஈக்குவிடார்,பனாமா,கொஸ்தாரிக்கா,நிக்கரக்குவா,ஹொண்டுராஸ், சல்வடோ  ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ்குஸ்மான்  என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன்  பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்….

கார்ல் மார்க்ஸ்– வாழ்க்கை வரலாறு :-_


பிறப்பு: 05-05-1818.
தந்தை: ஹெர்ஷல் மார்க்ஸ்.
தாய்: ஹென்ரிட்டா.
பிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி – 664 இலக்கமிட்ட வீடு.
மதம்: யூத மதம்.
சொந்த நாடு: பிரெஞ்சு.
பிறந்து வளர்ந்தது: ஜெர்மன்.
உடன் பிறந்தவர்கள்: 8 பேர்.
தந்தையை பற்றி: சாதாரணமான வக்கீலாக இருந்து குடும்ப வறுமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர்.
பள்ளி படிப்பு ஆரம்பித்த காலம்: 12 வயது.
பள்ளி படிப்பு முடித்த காலம்: 25-08-1835.
கல்லூரி வாழ்க்கைத் தொடக்கம்: பான் பல்கலைக்கழகம், வக்கில் படிப்பு(தந்தையின் விருப்பத்திற்காக)
கல்லூரி வாழ்க்கை: பான் நகரில் சமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறினார்.
கல்லூரி இறுதி வாழ்க்கை: தனது ஒழுங்கீனமான வாழ்க்கைக்கு காரல் மார்க்ஸின் தந்தையால் முடிவு எழுதப்பட்டது.
காதல் வாழ்க்கை:
காதலியின் பெயர்: ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.
காதலியிடம் இரசித்தது: உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக…
காரல் மார்க்ஸின் தோற்றம்: காணச் சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி அவரது கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர்.
ஜென்னியின் தோற்றம்: ரைன் லாந்தின் மிகச் சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானிய பெண்.
காதல் உருவாக்கம்: ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். ஜென்னியின் தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.
ஜென்னி இரசித்த ஆணின் அழகு: அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் அழகு!!!
மார்க்ஸின் கூற்று: ஜென்னி எனும் ஒரு அசாதாரணமான பெண் தன் வாழ்வில் வர வேண்டுமென்றால், தானும் தனது வாழ்க்கையும் அசாதாரணமானதாக இருக்க வேண்டும் எனும் எண்ணம். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம்.
இரண்டாவது கல்லூரி வாழ்க்கை:
ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க ஆரம்பித்தார். அந்த பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது. தொடர்ந்த படிப்பின் ஆர்வம் காரணமாக ஜென்னியைப் பற்றியே மறக்க வைத்தது.
ஜென்னியின் காதல்:
“என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல” மற்றும் “நீ அவனை மறந்து விடு” போன்று மார்க்ஸின் பெற்றோர் கூறிய வார்த்தைகள் அவளை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் அவருக்கு ஒரு காதல் கடிதம் மார்க்ஸிடம் இருந்து வந்தது. அதை அவள் தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள். கண்ணீர் ததும்பியதால் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. அவள் கண்களில் இருந்து “மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன” . அவற்றிற்கு காரணமான வரிகள் “இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்….”
தொழில்:
பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.
திருமண வாழ்க்கை:
ஜென்னிக்கு 29 வயதாகி விட்டது. தனது இளமையின் பாதி வாழ்க்கையை தூய காதலின் பொருட்டும், அவரது கனவாம் உலக மக்களின் நன்மைகளின் பொருட்டம் தியாகம் செய்து இருந்தாள். அதன் முடிவாக 1843ம் ஆண்டு ஜீன் 19ம் நாள் காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற இரு இதயங்கள் இணைந்தன. அந்த திருமணம் எளிமையுடனும், அழகுடனும் நடந்தேறியது. அவர்கள் திருமணத்துடன் அவர்கள் அறியாமலேயே இன்னும் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன.
1. உலகின் தலைசிறந்த காதலுக்கான இலக்கண புத்தகம் மூடிவைக்கப்பட்டது.
2. உலகின் தலைசிறந்த குடும்ப வாழ்க்கைக்கான புத்தகம் திறக்கப்பட்டது.
தொழில் புரட்சி: உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என மார்க்ஸ் ஆணித்தரமாக கூறியதோடு இல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இதைப்பற்றி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”. இதன் காரணமாக “முன்னேற்றம்” பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. ஜெர்மன் அரசு மார்க்ஸை நாடு கடத்த உத்திரவிட்டது. அப்போது அவருக்கு “ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை… அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லிவிட்டால் போதும் அவர் எந்தத் தடையும் இல்லாமல் வாழலாம் அந்த ஒரு வார்த்தை… மன்னிப்பு”!!!
நாடு மாற்றம்: சீறிப்பாயும் ஏவுகணைக்குப் பின்னால் பாயும் நெருப்பைப் போல், மார்கஸின் பின்னிருந்து இயக்கிய சொல் புரட்சி. சில நாட்களிலேயே மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்து குடியேறினார். “பெல்ஜியம் அரசு நடுங்க ஆரம்பித்து. 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து ஒரு நாடே பயந்தன என்றால் இந்த இளைஞனின் எழுத்தும் சிந்தனையும் எத்தகைய வீரம் உடையதாக இருக்கும். “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது.
கம்யுனிஸ்ட்கள்: இந்த சூழ்நிலையில் ஒத்த கருத்துக்களை உடைய நெசவுத் தொழில் அதிபர் மகனான ஏங்கல்ஸ் மார்கஸ் உடன் சேர்ந்தார். இவர்கள் இருவரின் இணைவு “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது”. அதன் பெயர் தான் “பொதுவுடமைச் சங்கம்”. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர்.
இதன் பிண்ணனியாக “லண்டன் மாநகரத்தில் பிரமாண்டமான நட்சத்திரமாக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த முதல் கம்யூனிஸ்ட் சங்கம் உதயமானது”. அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுக்க தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய கம்யுனிஸ்ட் அடுத்த வருடமே இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தங்களது புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்ஸீம் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.
இதன் விளைவாக, 1848ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பாரீஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்னன் லூயி பிலிப் தப்பியோடினான். அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் நாட்டின் மன்னன் தன் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டான். அதே நேரத்தில் மார்க்ஸீம் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜென்னியை அந்த நாட்டின் “தேக விற்பனை பெண்” கைதிகளுடன் அடைத்தனர். அந்த இரவு அவளுக்கு நரகமாக இருந்தது. 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல முறை பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் கூறியது,
“எல்லா நாடும் என் நாடே!
எல்லா மக்களும் என் மக்கள்!!
நானோர் உலக மகன்
சோதனைக் காலம்: வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால், சோதனைகளிலேயே வாழ்க்கை ஓடினால் என்ன ஆகும்? மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி… ஓரே ஒரு அடி… “சலிப்பின் காரணமாக ஜென்னி பின் வாங்கியிருந்தால் கூட உலக வரலாறே திசை மாறியிருக்கும்”.
இறுதியாக மார்க்ஸ் தனது புகலிடமாக இலண்டன் வந்தார். உலகின் பணக்கார நாடான இலண்டனில் அவர்க்கு பிரச்சனை வீ்ட்டுக்குள்ளயே முளைத்தது. பசி என்ற இரண்டு எழுத்து அவரது வீட்டினுள் நுழைந்தது. அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பசி என்றால் நன்கு அறியும் வயது. குழந்தைகளுக்கும், மார்கஸீக்கும் பரிமாறி விட்டு பட்டினி கிடக்க ஆரம்பித்தாள் ஜென்னி. இதனால் ஜென்னியின் தனங்களில் பால் வற்றத் துவங்கியது. ஒரு காலக் கட்டத்தில் தனங்கள் சுருங்கி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்று இரவு மார்க்ஸின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் மட்டும் இல்லாமல் பிரபு குடும்பத்தில் பிறந்த ஜென்னியின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலித்தது.
இதற்கிடையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கொடுமைக்கார எஜமானியால் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் ஜென்னியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அபகரித்தனர். இந்த “பெருங்கொடுமை கொலை வெறியோடு அவர்களது மூன்று குழந்தைகளையும் தின்று தீர்த்தது”. இதை விட ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் நேர்ந்திராது. இந்த கொடுமையான சமயத்தில் ஜென்னி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை”.
தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் துயருற்ற இந்தக் காலக்கட்டத்தில் தான் “உலகத்தின் பொருளாதாரம்” பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார் மார்க்ஸ். 1867 செப்டம்பர் 14, உலகத் தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தர விடிவெள்ளி முழுமையாக உதயமான நாள். மார்க்ஸ் எனும் இயந்திரத்தின் 15 ஆண்டுகளின் வியர்வை துளிகள் எழுத்துருக்களாகி காகிதங்களில் பிரசுரமாகி “மூலதனம்” எனும் புத்தகமாக வெளிவந்தது. வெளியான நாள் முதலே “மூலதனம்” உலகமெங்கும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இதைத் தொடர்நது மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாயின. இன்றளவும் உலகின் தலைச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக “மூலதனம்” கருதப்படுகிறது.
இந்த சமயத்தில் ஜென்னி தன் தாயின் இறப்பு காரணமாக ஜெர்மன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் மனைவியின் பிரிவை இவ்வாறு கூறினார்.
உன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதை கண் கூடாகக் பார்க்கிறேன். ஒரே ஒரு முறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக் கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகி விடும். அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது.
மூலதனம் நூல்: உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை!!! பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.
இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலின் விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இதைத்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” எனும் நூலில் தெளிவுபடுத்தி தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.
பிடித்த விஷயம்: புகைப்பிடிப்பது, பால் கலக்காத கருப்பு காபி குடிப்பது மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி.
பிடிக்காத விஷயம்: பிச்சைப் போடுவது. “பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது எவ்வளவு மேலான விஷயம்”.
மனைவியின் இறப்பு: 1881ம் அண்டு, இரக்கமற்ற டிசம்பர் மாதத்தில், உலகத்துக் காதலையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்த ஜென்னி எனும் மலர் பூமியில் உதிர்ந்தது.
மார்க்ஸின் இறப்பு: 1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.
“யூதனாகப் பிறந்தார்!
கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!
மனிதனாக இறந்தார்!!!
காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்…………….”.