Thursday, December 15, 2011


 "கஜினி முகமது" இறந்த பின்னர் படையெடுத்து சென்று "கஜினி" நகரை அழித்து தரைமட்டமாக்கிய "அலாவுதீன் ஹூசேன்" என்ற சுல்தானின் மருமகனான " கோரி முகமது" யின் இந்திய படையெடுப்பில் வெற்றி கண்டு திரும்பி செல்லும் போது தன் சார்பாக டெல்லி அரியணையில் அமர்த்தப்பட்டவர் "குத்புதீன் அய்பெக்" எனும் அடிமை. இவர் தன் புத்திசாலி தனத்தாலும் திறமையாலும் மன்னரின் நம்பிக்கையை பெற்று படிப்படியாக பிரதம தளபதியாக உயர்ந்த துருக்கிய இனத்தவராவார். இவரே இந்தியாவில் அடிமை பரம்பரையில் வந்த முதல் அரசர். உலகளவில் மிகவும் புகழ் பெற்ற "குதுப்மினாரை" கட்டிய பெருமை இவரையே சாரும்.

[ பல முறை தோல்விக்கு பின்னர் வெற்றியை கண்டதாக சொல்லப்படும்  "கஜினி முகமது" உண்மையில் ஒரு முறை கூட போரில் தோற்கவில்லையாம். இந்தியாவை நோக்கி இவை முதல் முறை படையெடுத்து வந்த ஆண்டு கி.பி 1000 .   ஒவ்வொரு முறை இந்தியாவை நோக்கி படையெடுத்து வரும் போது எதிர்க்கும் படைகளை துவம்சம் செய்து அந்நாட்டை சூறையாடி அங்குள்ள முத்து, ரத்தினம், பவளம், வைரம், வைடூரியம், தங்கம் வெள்ளி, பட்டாடைகள்  மற்றும் கலை நயம் மிக்க பொருட்கள் என அனைத்தையும் கொண்டு செல்வது வழக்கமாம். இக்கொடூர சூறையாடல் வருடத்திற்கொரு முறை என 17 முறை நடந்திருக்கிறது. கஜினி முகமது போரில் வெற்றி கண்டதாக சொல்லப்படும் 18 வது முறை அதாவது கி.பி.1025 -ல்  குறி வைத்தது குஜராத்தின் தென் கோடியில்  அமைந்திருந்த நாடெங்கும் புகழ் பரவிக்கிடந்த "சோமநாதர் என்ற பெயரில் வழிபடப்பட்ட சிவன் கோவில் மீது. இக்கோவிலின் சிறப்பம்சமே சிவலிங்கம் அந்தரத்தில் மிதக்கும் படி அமைந்திருந்தது தான்.  இக்கோவிலை சூறையாடும் போது அர்ச்சகர்கள், ஊர் மக்கள் படைவீரர்கள் என கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரதிற்க்கும்  மேல் இருக்குமாம்.  சோமநாதர் கோவிலிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் எடை மட்டும் சுமார் ஆறு டன் இருக்கும்  என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.  செல்வங்களை கொள்ளையடித்ததோடு நிற்காமல் சிவலிங்கம் உட்ப்பட மொத்த கோவிலையும் உருத்தெரியாமல் அழித்து விட்டு சென்றுள்ளனர் அந்த வெறி பிடித்த ஓநாய்கள். இதற்கு பின்னர் கஜினி இந்தியாவிற்கு வரவில்லை. ஆக கஜினியின் ஒவ்வொரு படையெடுப்பும் வெற்றி என்பதே வரலாற்று உண்மை.]  

         குதிரை பயிற்சியின் போது நடந்த ஒரு விபத்தில் "குத்புதீன்" மரணமடைந்து விட அதனை தொடர்ந்து ஆட்சியமைத்த "ஆராம்ஷா" வின் ஆட்சியமைப்பு சரியில்லாமல் போக குத்புதீனின் மருமகனான "இல்தூத்மிஷ்" என்பவர் ஆட்சியை கைப்பற்றினார். இவரும் அடிமையாக எடுத்து வளர்க்கப்பட்டு தளபதியாக உயர்ந்தவர் தான். பின்னாளில் இல்தூத்மிஷ் தான் "குதுப்மினாரை" முழுமையாக கட்டிமுடித்தார். இவரின் இருபத்தாறு ஆண்டு ஆட்சிக்கு பின்னர் அரியணை ஏறிய "ருக்னுதீன் பிரோஸ்" குடி, கும்மாளம், கூத்து என நாட்டை சீரழிக்க ஆட்சி இல்தூத்மிஷ்-ன் மகளான "ரஸ்யா பேகம்" ற்கு கை மாறியது. அரியணை ஏறி ஆட்சியமைக்க ஏதுவான அத்தனை அம்சங்களும் ஒருங்கே பெற்றிருந்தும் "ரஸ்யா' டெல்லியை ஆண்டது வெறும் மூன்று வருடங்கள் தான். ஒரு பெண் தங்களை ஆள்வதா என்று கூடவே இருந்த துரோகிகளால் தீர்த்துக்கட்டப்பட்டார் "டெல்லியை முதலும் கடைசியுமாய் ஆண்ட பெண் சுல்தான் என்று பெயர் பெற்ற "ரஸ்யா பேகம்".

ரஸ்யா பேகம் கொலையுண்ட பிறகு ஆறு வருடத்தில் இருவர் ஆட்சிப்பொறுப்பில் ஏறி நாட்டை ஏறக்குறைய சாக்கடையாக்கினார்கள். அதற்கு பின்னர் அரியணை ஏறியவர் ரஸ்யா பேகத்தின் இளைய சகோதரர் "நஸூருதீன் மகமூத்". இவரை "மலரை போன்ற மென்மையான குணமுடைய சுல்தான்" என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எந்த தவறும் செய்யாமல் எளிமையாக வாழ்ந்த ஏகபத்தினி விரதன். புனித குர்-ஆன் நூலை தன் கையால் அழகாக எழுதி அதனை விற்று அதில் வரும் வருமானத்தை தன் சொந்த செலவுக்காக பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இவர் டெல்லியை ஆண்டது இருபதாண்டு காலங்கள்.

சூழ்ச்சிகளும், சூட்சமங்களும், எதிரிகளும், துரோகிகளும் கண்ணுக்கு தெரியாத மாயைப்போல  சுற்றிப்படர்ந்திருக்கும் நாட்டில் ஒரு மென்மையான மன்னரால் எப்படி இருபதாண்டு காலம் ஆட்சி  நடத்தியிருக்க முடியும், இக்கால கட்டத்தில் ஒரு போர் கூடவா நடை பெறவில்லை?, ஒருவர் கூடவா டெல்லியை நோக்கி படையெடுத்து வரவில்லை? என்று உங்களில் பலரும் கேள்வி எழுப்பலாம். ஆம் !! உங்கள் கேள்வியும் நியாமானதே. இந்த இருபதாண்டு காலமும் "மலரையொத்த மேன்மேயான மன்னரை பொத்தி பாதுகாத்தது "பால்பன்" என்ற இரும்புக்கரம். நஸூருதீனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் பல்பனையே அடுத்த வாரிசாக நியமித்தார். பால்பன் சுல்தான் நஸூருதீனுக்கு மாமனாரும் கூட. இவரும் அடிமையாக வந்து சேர்ந்தவர் தான். அடிமை அரசர்களிலேயே மிகவும் புகழ் பெற்றவர் "பல்பன்" தான் எனலாம். இவர் ஆண்ட நாற்பதாண்டு காலமும் டெல்லியின் புகழ் உயர்ந்தோங்கி நின்றது. மாமன்னர் "பல்பன்" ஆட்சிக்கு பின்னர் சிம்மாசனம் ஏறிய அவரின் பேரன் ஆட்சியை கவனிக்காமல் ஆடையிழந்து அழகிகளுடன் அந்தபுரத்தில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்து கொள்ள கொஞ்ச காலத்தில் நாட்டில் கோஷ்டி சண்டைகள் துவங்கின. அச்சயமயத்தில் ஓங்கி நின்றது "ஆப்கானிய கில்ஜி" பிரபுக்களின் கை. இது தான் தக்க சமயமென்று "ஜிலாலுதீன் பிரோஷ் ஷா" என்ற கில்ஜி பிரபு படைதிரட்டி வந்து டெல்லியை கைப்பற்றினார். அத்துடன் அடிமை சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.


13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் 
தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது 
அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட, குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் 
பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரியபோது, இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார். இல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும். இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது. மங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை. அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான். இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான். 


ஷேர்கானின் இறப்பிற்கு பின்மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான். வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான். தன் 80வது 
வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது. 

இந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான், ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை. அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து 

வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான். மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் 
திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான். அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று. அது போன்றதே காஜி மாலிக் 

மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம். 

No comments:

Post a Comment